Saturday, December 4, 2021

ஆகுபெயர் ஆக்கப்பெயர் கூட்டுப்பெயர்

ஆகுபெயர்

ஒரு பொருளுக்கு இயல்பாய் உள்ள பெயர் அதனோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்கு தொன்று தொட்டு ஆகி வருமாயின் அது 'ஆகுபெயர்' எனப்படும்.

  • பொருளாகுபெயர்
    மல்லிகை சூடினாள். (முதற்பொருளின் பெயர்; அதன் உறுப்பாகிய மலரைக் குறிக்கின்றது)
  • சினையாகுபெயர்
    வெற்றிலை நட்டான். (வெற்றிலை என்னும் சினையின் பெயர்; அம் மரத்தைக் குறிக்கின்றது.)
  • இடவாகுபெயர்
    இலங்கை வென்றது. (இலங்கை என்னும் இடத்தின் பெயர்; விளையாடிய வீரர்களைக் குறிக்கின்றது.
  • காலவாகுபெயர்
    கார்த்திகை பூத்தது. (இங்கு கார்த்திகை என்னும் காலத்தின் பெயர்; அக்காலத்திற் பூக்கும் கொடியைக் குறிக்கின்றது.)
  • குணவாகுபெயர்
    வெள்ளையன் வந்தான்.( இங்கு வெள்ளை நிறம்; வெள்ளை நிறமுடைய ஒருவரைக் குறிக்கின்றது.)
  • தொழிலாகுபெயர்
    பொரியல் உண்டேன். (இங்கு பொரியல் என்னும் தொழில்; அத் தொழிலை அடைந்த உணவைக் குறிக்கின்றது.)

ஆக்கப்பெயர்

பெயர்ச்சொல் அல்லது வினைச் சொல்லுடன் விகுதி சேர்த்து உருவாக்கப்படும் பெயர்ச்சொல் 'ஆக்கப்பெயர்' எனப்படும்.

  • பெயர்ச்சொல்லுடன் விகுதி சேர்ந்தவை
    நோய், விருந்து, தொழில் என்னும் பெயர்ச்சொற்களுடன் 'ஆளி' என்னும் விகுதி சேர்த்து உருவாக்கப்பட்ட சொற்கள் நோயாளி, விருந்தாளி, தொழிலாளி ஆகும்.

    புத்தி, பலம் என்னும் பெயர்ச்சொற்களுடன் 'சாலி' என்னும் விகுதி சேர்த்து உருவாக்கப்பட்ட சொற்கள் புத்திசாலி, பலசாலி ஆகும்.
  • வினைச்சொல்லுடன் விகுதி சேர்ந்தவை
    காண், நீள் முதலான வினைச்சொற்களுடன் 'சி' என்னும் விகுதி சேர்த்து உருவாக்கப்பட்ட சொற்கள் பெயர்ச்சொற்கள் காட்சி, நீட்சி ஆகும்.

    தொழு, அழு, எழு முதலான வினைச்சொற்களுடன் 'கை' என்னும் விகுதி சேர்த்து உருவாக்கப்பட்ட பெயர்ச்சொற்கள் சொற்கள் தொழுகை, அழுகை, எழுகை ஆகும்.

கூட்டுப்பெயர்

இரண்டு அல்லது பல சொற்கள் இணைந்து உருவாக்கப்பட்ட சொற்கள் 'கூட்டுப்பெயர்' எனப்படும். இவை ஒரு சொல்லாகவே செயற்படும்.

  • பெயர்ச் சொல்லுடன் பெயர்ச் சொல் இணைந்து உருவானவை.
    புகை + வண்டி= புகைவண்டி
    வான்+ஒலி=வானொலி
    வானம்+வில்=வானவில்
  • வினைச்சொல்லுடன் பெயர்ச்சொல் இணைந்து உருவானவை.
    எறி+கணை= எறிகணை
    சுடு+கலன்=சுடுகலன்
    எழுது+கோல்= எழுதுகோல்


No comments:

Post a Comment