இயற்கையைப் பாதுகாப்போம்.
இவ்வுலகில் உள்ள அனைத்தையும் இயற்கை செயற்கை என இரு வகையாகப் பிரிக்கலாம். இயற்கை எனும் பொழுது தானாகவே தோன்றிக் காணப்படுபவை. இவை உயிருள்ளவையாகவும் , சடப்பொருட்களாகவும், சக்திவடிவங்களாகும் காணப்படுகின்றன. மேலும் உயிருள்ளவைகள் தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என மூன்று வகையாகவும; சடப்பொருட்களை திண்மம், திரவம், வாயு எனும் மூன்று நிலைகளிலும்; சக்திகள் வெப்பம், ஒலி, ஒலி, புவி ஈர்ப்பு, காந்தசக்தி என பல வடிவங்களிலும் உள்ளன. இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. சடப்பொருட்களும், சக்திகளும் இல்லையென்றால் எந்த உயிரினமும் வாழ முடியாது. நீரும், காற்றும், மண்ணும் இல்லாவிட்டால் இவ்வுலகம் எப்படியிருக்கும்?, ஒலி, வெப்பம், ஒளி, புவியீர்ப்பு போன்ற சக்திகள் இல்லா விட்டால் உலகம் எப்படியிருக்கும்?. உயிரினங்கள் கூட ஒன்றில் ஒன்று தமது தேவைகளுக்கு தங்கியே உள்ளன. இவை அனைத்தயும் எமது முன்னோர் நன்கு அறிந்து, அவற்றை தெய்வமாகப் வணங்கிப் பேணி வந்தனர். அதனாலேயே இக்கால மனிதர்களான நாம் அவற்றை அனுபவிக்கிறோம்.
இக்கால மனிதர்களாகிய நாம் என்ன செய்கிறோம். சனத்தொகைப் பெருக்கம் காரணமாகவும், சக்தித் தேவைகளின் அதிகரிப்புக் காரணமாகவும் இயற்கை சூழலை அழித்து சமநிலையைக் குழப்பி , செயற்கையானவற்றை உருவாக்குகிறோம். காடுகளை அழித்து, மரங்களை வெட்டி பெரிய பெரிய வீடுகளையும், தொழிற்சாலைகளையும், பெருந்தெருக்களையும் அமைக்கிறோம். பிளாஸ்டிக், பொலித்தீன் பொருட்களை உருவாக்கி அதிகஅளவில் பயன் படுத்தி சுற்றாடலை நிறைக்கிறோம். சுவட்டு எரிபொருட்களான பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றை தொழிற்சாலை, போக்குவரத்துத் தேவைகளுக்காக அதிகஅளவிற் பயன்படுத்தி வளியையும், நீர்நிலைகளையும் ஏன் மண் வளத்தையும் கூட நாசமாக்குகிறோம். பாரிய அளவில் விவசாயத்தைச் செய்து அசேதனப் பசளையையும், அசேதன கிருமிநாசினியையும் அதிகஅளவில் பயன்படுத்தி சூழலை மேலும் மோசமாக்குகிறோம். சக்தி தேவைகளுக்காக அணு உலைகளைப் பயன்படுத்தி அவற்றின் கழிவுகளை என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுகின்றோம். ஏன் பல நாடுகள் தமது வல்லமையைக் காட்ட அனுவாயுதத்தைக் கூட தயாரித்து வைத்துள்ளன.
எமது இச் செயற்பாடுகளினால் நாம் சுவாசிக்கும் காற்று சுத்தமில்லை. நாம் பருகும் நீர் சுத்தமில்லை. நாம் உண்ணும் உணவிற் கூட நச்சுப் பொருட்கள் கலந்துள்ளன. இது இப்படியே போனால் மனிதனுக்கு மட்டுமல்ல அனைத்து உயினங்களுக்கும் அழிவுகாலம் விரைந்து கொண்டே இருக்கும். வளி மண்டலத்தில் உள்ள ஓசோன் படலம் கூட ஓட்டையாகி புவி வெப்பம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. இதனால் துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் கூட உருகத் தொடக்கி விட்டது. இது தொடர்ந்தால் கடல் மட்டம் அதிகரிக்கும் தாழ் நிலங்கள் கடலுடன் சேர்ந்துவிடும். பொலித்தீன், பிளாஸ்டிக் பொருட்கள் பல நூறு வருடங்களுக்கு மேல் உக்காமல் மண் வளத்துக்கும் , உயிரினகளுக்கும் பெரும் தலையிடியாக இருக்கிறது. நாம் பயன்படுத்தி பயன் படுத்தமுடியாத நிலையில் உள்ள பழைய மின்னியற் பொருட் கழிவுகள் கூட உலக நாடுகளுக்கு பிரச்சினையாகியுள்ளது.
எமக்கு எமது முன்னோர் பாதுகாத்துத் தந்த இந்த இயற்கை வளங்களை, நாம் எப்படி எமது வருங்காலச் சந்ததியினருக்குக் கொடுக்கப் போகிறோம். அதற்கு நாம் இன்றே காடுகளைப் பாதுகாப்போம். மரங்களை வளர்ப்போம். பொலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் பாவிப்பதைத் தவிர்ப்போம். இயற்கை விவசாயத்தைச் செய்வோம். நீர் நிலைகளைப் பாதுகாப்போம். சுவட்டு எரிபொருட் பாவனையைக் குறைத்து மாற்று சக்திகளைப் பயன்படுத்துவோம். தொழிற்சாலைக் கழிவுகளையும், மற்றைய கழிவுகளையும் முறையாக அகற்றுவோம். மற்றைய உயிரினங்களையும் பாதுகாப்போம். எமது முன்னோர் போல் இயற்கையைத் தெய்வமாக வணங்கிப் பாதுகாத்தால் அது எம்மைப் பாதுகாக்கும்.
No comments:
Post a Comment