தமிழ்ச் சொற்கள்

பெயர்ச் சொற்கள் 
நாம் வாழும் உலகில் உயிருள்ள, உயிரற்ற கண்ணுக்குப் புலனாகின்ற, கண்ணுக்குப் புலனாகாத எண்ணற்ற பொருட்கள் உள்ளன. இப்பொருட்களை உணர்த்த வல்ல சொற்களை பெயர்ச் சொற்கள் என்பர்.
(கிளி, பேனா , மரம் ,சிவப்பு, புத்தகம், பூ, மாதம், நிறம், வீடு, விமானம், நாய், கமலன், பலா, இந்தியா, .......)

பெயர்ச் சொற்களை ஆறு வகையாகப்பிரிக்கலாம்.
  • பொருட்ப்பெயர் : 
    ஒரு பொருளின் அல்லது உயிரின் பெயரைக் குறிக்கும்.
    (மரம் ,பென்சில் ,மனிதன் ,கார் ,நாய் ,பூனை, புத்தகம்  ......)
  • இடப்பெயர்:
    இடங்களின் பெயரைக் குறிக்கும்.
     (கொழும்பு ,இந்தியா ,பாடசாலை ,மைதானம், ஊர், வீதி, மலை, கோயில், வைத்திய சாலை, நகரம்  .......)
  • காலப்பெயர்:
    காலங்களின் பெயரைக் குறிக்கும்.
     (நேரம் ,இரவு ,பகல் ,மாதம் ,வருடம் ,நிமிடம் .....)
  • சினைப்பெயர்:
    ஒன்றின் பகுதியையோ, உறுப்பையோ குறிக்கும்.
     (கண் ,காது , இலை,கால் ,தண்டு ,பூ .....) 
  • குணப்பெயர்:
    நிறம், சுவை, வடிவம் முதலிய பண்புகளைக் குறிக்கும்.
     (அறிவு ,நீளம் ,சதுரம, இனிமை, செம்மை, நிறம், நன்மை, கோபம், கசப்பு, சிவப்பு, சூடு  . .....) 
  • தொழிற்பெயர்:
    தொழிலின் அல்லது செயலின் பெயரைக்குறிக்கும்.
     (நடத்தல் ,ஓடுதல் ,படித்தல், விளையாடுதல்  ...) :-

    தொழிற்பெயர் : இது பெரும்பாலும் தொழிலுக்கே பெயராய் வரும்., பெரும்பாலும் காலம் காட்டாது., படர்க்கை இடத்திற்கு மட்டுமே உரியது. பெரும்பாலும் பின்வரும் விகுதிகளைப் பெற்றே வரும். (தல், அல், அம், ஐ, இ, கை, கு, பு, உ, தி, சி, வி, உள், து, மை)
பெயர்ச்சொற்களின் வகைகள்


பெயர்ச்சொற்கள் பெயரிடப்பட்ட அடிப்படையில் இடுகுறிப்பெயர், காரணப்பெயர், காரணஇடுகுறிப்பெயர் என பாகுபடுத்தப்படுகின்றன.
  • இடுகுறிப்பெயர் 
    மரம், நிலம், மலை,கல், மண்  முதலான பெயர்ச்ச்சொற்கள் பண்டைய காலம் முதல் இன்று வரை ஒரு காரணமும் கருதாது பொருளை உணர்த்தி நிற்கின்றன. ஆதலால் இவ்வகையான பெயர்களை இடுகுறிப்பெயர் என்போம்.

    மரம் :- என்பது இடுகுறிப் பெயரானாலும் எல்லா வகை மரங்களையும் குறிப்பதல் இது இடுகுறிப் பொதுப் பெயர் எனப்படும்.

    வேம்பு : - என்பது இடுகுறிப் பெயரானாலும் ஒரு வகை மரத்தையே குறிப்பதால் இடுகுறிச் சிறப்புப் பெயர் எனப்படும்.
  • காரணப்பெயர்
    பறவை (பறப்பதால்), வளையம்(வளைந்திருப்பதால்), அணி (அணிவதால்) முதலான சொற்கள் காரணம் கருதி வழங்கப்பட்டு வரும் பெயர்கள் ஆகும். ஆகையால் இவ்வகையான பெயர்களை காரணப்பெயர் என்போம்.
    பறவை :- பறக்கும் காரணத்தால் பல பட்சிகளுக்கும் பொதுவாக இருப்பதால் இது காரணப் பொதுப்பெயர் எனப்படும்.

    மீன்கொத்தி : - இது மீன்களைக் கொத்துவதால் அமைந்தாலும், ஒரு வகைப் பறவைக்கே வழக்கப் படுவதால். இது காரணச் சிறப்புப் பெயர் எனப்படும்.
  • காரண இடுகுறிப்பெயர்
    நாற்காலி, வளையல், முள்ளி, காற்றாடி முதலான சொற்கள் காரணம் கருதிய கூட்டத்துள் காரணம் எதுவுமின்றி குறித்ததொரு வகையை மட்டும் சுட்டி வருகின்றன. இத்தகைய பெயர்களை காரண இடுகுறிப் பெயர் என்பர்.

    முள்ளி :- என்பது முள்ளையுடைய ஒரு செடி மரமாகும். பல செடிகளுக்கு முட்கள் இருப்பினும், நாம் ஒருவகைச் செடியையே முள்ளி என்கிறோம்.

    காற்றாடி :- என்பது  காற்றில் ஆடும் எல்லாப் பொருட்களையும் குறிப்பதாயினும், நாம் சிறுவர் விளையாடும் உபகரணத்தையே  காற்றாடி என்கிறோம்.

வினைச்சொற்கள்

வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை (செயலை) உணர்த்துவதாகும். வினைச் சொல் காலத்தைக் காட்டும்.

படித்தான் , வந்தான் ,நடந்தான் ,படிப்பான் ,நிற்கிறான் .....

வினைச்சொற்களை இருவகையாகப் பிரிக்கலாம் .
  • முற்றுவினை
    செயல் முடிந்து நிற்பது. காலத்தைக் காட்டும்.
    (வந்தது  ,போனது ,ஓடுகிறது ,வரும், பறந்தது, நடக்கிறேன்  ....)
  • எச்சவினை 
    • எச்சவினையை இரு வகையாகப் பிரிக்கலாம் 
      • பெயரெச்சம் (துரத்திய ,அழுத ,குடித்த ....)
        துரத்திய நாய்.
        அழுத பிள்ளை.
        குடித்த பால்.
      • வினையெச்சம் (ஓடி ,பாடி ,ஏற்றி ....)
        ஓடி வந்தான்.
        பாடி ஆடினான்.
        ஏற்றி அனுப்பினான்.
வினைச் சொற்கள் தெரிநிலை வினை, குறிப்பு வினை எனவும் இருவகைப்படும்.
தெரிநிலை வினை: - இது காலத்தை வெளிப்படையாகக் காட்டும். (ஆடினாள், ஓடினான், உண்கிறார்கள்...)

குறிப்பு வினை :- இது காலத்தைக் குறிப்பாகவே காட்டும்.
"கம்பன் கல்வியிற் பெரியவன்". என்ற வாக்கியத்தில் பெரியவன் என்பது வினைச் சொல். ஆனால் இது இறந்த காலமா?, நிகழ் காலமா?, எதிர் காலமா?
என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை.

தன் வினை :- (தானே செயலைச் செய்தல்)
நான் எடுத்தேன்.
நான் படித்தேன்.

பிற வினை :- (பிறரைக் கொண்டு செய்விப்பது.)
நான் எடுப்பித்தேன்.
நான் படிப்பித்தேன்.

இடைச் சொற்கள் 
வாக்கியத்தில் தனித்து நில்லாமல் பெயரையாவது  வினையையாவது சார்ந்தே வரும் சொற்கள் இடைச் சொற்கள் எனப்படும். அவற்றை பினவருமாறு வகைப் படுத்தலாம்.
  • ஐ, ஆல், கு, இன், அது, கண்  -  வேற்றுமை உருபுகள்.
  • அன், ஆன், அள், ஆள் - விகுதிகள்
  • த், ட், ற், இன், கிறு, இப், வ் - இடைநிலைகள்
  • அன், இன், அல், அற்று  - உவம உருபுகள்
  • அ, இ, உ - சுட்டெழுத்துக்கள்  
  • எ, யா, ஆ, ஓ, ஏ - வினாக்கள்
  • மற்று, கொல், மன், என, என்று 
உரிச் சொற்கள்
பெயர் வினைகளின் குணத்தை உணர்த்தும் சொல் உரிச் சொல்லாகும்.
இது பெயர் உரிச் சொல், வினை உரிச் சொல் என இரு வகைப் படும்.
நனி புகழ் - இங்கு நனி என்பது பெயரை அடுத்து வருவதால் பெயர் உரிச் சொல் எனப்படும்.

நனி தின்றான் - இங்கு நனி என்பது தின்றான் என்னும் வினையுடன் வருவதால் நனி என்பது வினை உரிச் சொல் எனப்படும்.

ஒரு குணம் காட்டும் பல உரிச்சொற்கள் 
சால, கூர், உறு  - இவை மிகுதி என்னும் ஒரு குணத்தைக் காட்டும். (சாலப் பேசினான்., உறு புகழ்., கூர் மனம்)

பல குணம் காட்டும் ஓர் உரிச் சொல்
கடி என்பது - காவல், கூர்மை, மணம், அச்சம் எனும் பொருட்களைத் தரும் ஒரு உரிச் சொல்லாகும்.

குறிப்புக்கள்

வினையடிகில் இருந்து வினைச் சொற்கள் பிறக்கும். சில உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.


வினையடி இறந்த காலம் நிகழ்காலம்எதிர்காலம்
படி படித்தான் படிக்கிறான் படிப்பான்
குடி குடித்தான் குடிக்கிறான் குடிப்பான்
அடி அடித்தான் அடிக்கிறான் அடிப்பான்
சிரி சிரித்தான் சிரிக்கிறான் சிரிப்பான்
போ போனான் போகிறான் போவான்
எழு எழுந்தான் எழுகிறான் எழுவான்
வா வந்தாள் வருகிறாள் வருவாள்
ஓடு ஓடினார்கள் ஓடுகிறார்கள் ஓடுவார்கள்

முற்று வினைகள் அவற்றின் திணை, எண், இடம், காலம் என்பவற்றிற்கு ஏற்ப வடிவம் மாறுபடும்.

உ+ம்:
காகம் பறக்கின்றது.
காகங்கள் பறக்கின்றன.
காகம் பறக்கும்.
அவன் பறக்கிறான்.
அவள் பறக்கிறாள்.
அவர்கள் பறக்கிறார்கள்.
நாங்கள் பறக்கின்றோம்.
நான் பறக்கிறேன்.
கமல் பறந்தான்.


மேலும் படிக்க.

   

No comments:

Post a Comment