பழ மொழிகள்

பழ மொழிகள்

Proverbs in Tamil

பழமொழிகள் என்பது மண்ணின் மகிமையை, கலாச்சாரத்தின் பெருமையை, பண்பாட்டின் மேன்மையை, நாட்டு நடப்பின் தன்மையை, மனித வாழ்வின் இலக்கணத்தை உலகுக்கு உணர்த்தும் உயிரியல் தத்துவ சிந்தாந்தச் செல்வமாகும். 
சுருங்கக்கூறின் பழமொழிகள் யாவும் நமக்கு நல்வழி காட்டவல்ல நமது முன்னோரின் அனுபவ வார்த்தைகள் ஆகும். நாம் எடுத்துக் கொண்ட விடயத்தை வலியுறுத்தி கூறுவதற்கு இவை துணை புரிகின்றன. தமிழ் ஒரு பழமை வாய்ந்த மொழியாகையால் அதில் நிறைய பழமொழிகள் உள்ளன. அவற்றில் சில கீழே உள்ளன.

Pazha Mozhikal/ Proverbs in Tamil

  • அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு - ஒற்றுமையே பலம்
  • இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை - திருப்திப்படாதமனம்
  • ஏட்டுச்சுரைக்காய்  கறிக்குதவாது - வெறும் புத்தகப்படிப்பு
  • காற்றுள்ள போதே தூற்றிக்கொள்  - காலந்தவறேல்
  • ஒன்றுபட்டால்  உண்டு வாழ்வு - ஒற்றுமை
  • ஆழம் அறியாமல் காலை விடாதே - எதையும் ஆராந்து செய்ய வேண்டும்
  • அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி - முன்மாதிரி
  • ஆனைக்கொருகாலம் பூனைக்கொருகாலம் - காலம் மாறி வரும்
  • வல்லனுக்குப் புல்லும் ஆயுதம் - திறமையில் நம்பிக்கை
  • கந்தையானாலும் கசக்கிக் கட்டு - வறுமையிற்ச்செம்மை
  • அடிமேல் அடித்தால் அம்மியும் நகரும் - விடா முயற்சி பலன் தரும்
  • உப்பிடடவனை உள்ளளவும் நினை - நன்றி மறவேல்
  • குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி மங்காது - நற்புகழ் மங்குவதில்லை
  • பேராசை பெரு நட்டம் - அதிக ஆசை தீமை விளைவிக்கும்.
  • முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் - ஊக்கம் உள்ளவர் தாழ்வுற மாடடார்
  • எறும்பூரக் கற்குழியும் - சிறிய விடயமும் நல்ல பலன் தரும் 
  • கிட்டாதாயின் வெட்டென மற - கிடைக்காத ஒன்றை உடனே மறக்க வேண்டும் 
  • பழகப்பழக பாலும் புளிக்கும் - போகப் போக எந்தவிடயமும் சலிப்புத்தரும் 
  • சிறுதுளி பெருவெள்ளம் - சிறிய முயற்சி பெரிய பலனைத் தரும் 
  • ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்- ஒருவரின் ஒரு பண்பைக் கொண்டு அவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
  • தன்வினை தன்னைச் சுடும் - பிறருக்குச் செய்யும் தீங்கு தனக்கே தீங்காகும் 
  • கடுகு சிறிதானாலும் காரம் பெரிது- சிறிதெனினும் சிறப்புண்டு 
  • அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு - எல்லையை மீறினால் ஆபத்தாகும்
  • கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு - கற்க வேண்டிய விடயங்கள் பல உள்ளன 
  • எடுப்பது பிச்சை ஏறுவது பல்லாக்கு - வீண் பெருமை 
  • எய்தவன் இருக்க அம்பை நோவானேன் - தப்பபிப்பிராயம் 
  • பானையில் இருந்தால்தான் அகப்பையில் வரும் - உள்ளது தான்  உண்டு 
  • கிணற்று தவளைக்கு நாட்டு வளர்ப்பமேன் - உலகை யறி 
  • குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்- மனச் சாடசி உறுத்தும் 
  • பதறாத காரியம் சிதறாது - அமைதியின் வெற்றி 
  • கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை - பேராசை 
  • ஆறிலும் சாவு நூறிலும் சாவு - வாழ்வு நிலையற்றது 
  • நித்தம் போனால் முற்றம் சலிக்கும் - அதிகம் பழகினால் அருமை இராது 
  • துஸ்டரைக் கண்டால் தூர விலகு - தீமைக்கு விலக்கியிரு 
  • நிறை குடம் தளம்பாது - அறிஞர் சஞ்சலம் அடையார் 
  • சுவர் இருந்தால்த்தானே சித்திரம் வரையலாம் - உடம்பை பேண வேண்டும் 
  • பட்ட காலிலே படும் கேட்ட குடியே கெடும்- துன்பங்கள் தொடர்ந்து வரும் 
  • அற நனைந்தவனுக்கு குளிரென்ன கூதலென்ன - அதிக துன்பப் படடவனுக்கு மேலும் துன்பம் தாங்குவான்  
  • தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் - பிடிவாதம் 
  • பாத்திரம் அறிந்து பிச்சையிடு - தகுதி கண்டு செய் 
  • அலைமோதும் போதே தலை முழுகு - சந்தர்ப்பத்தைத் தவறவிடக் கூடாது. 
  • கெடுகுடி சொற்கேளாது -தீய வழியை விரும்புபவர் நற்புத்தி கேளார். 
  • தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் -இரத்த உறவின் வலிமை 
  • வேலைக் கள்ளிக்குப் பிள்ளைச் சாட்டு -போலி நியாயம் 
  • சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது - தகுதியற்றவர் முயற்சி பலன் தராது 
  • இளங்கன்று பயமறியாது - இளமையில் துணிவிருக்கும் 
  • பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் - பணஆசை யாரையும் விடாது 
  • மனமுண்டால் இடமுண்ண்டு - விரும்பினால் எதையும் செய்யலாம் 
  • கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை - கிடைத்ததை அனுபவிக்க முடியவில்லை 
  • ஐயர் வரும் மட்டும் அமாவாசை காத்திருக்குமா - காலம் நில்லாது  
  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும் - ஒருவரின் மனதில் உள்ளதை அவரின் முகம் காட்டிவிடும்.
  • ஆறிலும் சாவு நூறிலும் சாவு - மரணம் ஒருவருக்கு எப்போதும் வரலாம்.
  • ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? - இளமையிலேயே கற்க முடியும்.
  • பாம்பின் கால் பாம்பறியும். -  தீயவரை தீயவரே அறிவர்.
  • சோழியன் குடுமி சும்மா ஆடாது - பெரும் பயனைக் கருதிக் கொண்டு உதவி செய்தல்.
  • தருமம் தலை காக்கும் - நாம் செய்யும் தருமம் எம்மை ஆபதிற் காக்கும்.
  • பசித்தாலும் புலி புல்லைத் தின்னாது - உயர்ந்தவன் எந்நிலையிலும் தாழ்ந்து போக மாட்டான்.
  • ஆறின கஞ்சி பழங்கஞ்சி - பிற்போட்ட காரியம் நிறைவேறுவதில்லை.
  • ஆனைக்கும் அடி சறுக்கும் - வலியவனும் ஒரு நாள் மெலியவனிடம் தோற்க நேரிடும்.
  • உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது - ஊர் மக்கள் பேசுவதை தடுக்க முடியாது.
  • காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு - அவரவர்களுக்கு தங்களின் உடைமைகள் பெரிது.
  • எட்டாப் பழத்துக்குக் கொட்டாவி விடாதே - கிடைக்காத ஒன்றை எண்ணி வருந்தாதே 
  • பொய் சொன்ன வாய்க்குப் பொரியும் கிடைக்காது - பொய் உயர்சியைத் தராது.
  • மூடர் உறவால் கேடு விளையும் - அறிவற்றவர்களின் தொடர்பு கேட்டைத் தரும்.
  • உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும் - அனுபவியாது சேர்க்கும் சொத்து வீணாகும்.
  • நிழலின் அருமை வெயிலிற் தெரியும் - ஒரு பொருளின் சிறப்பு அது இல்லாத போது தான் தெரியும்.
  • சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் - முயற்சியே எதையும் கை கூடச் செய்யும்.
  • தவளையும் தன் வாயாற் கெடும் - அளவோடு சிந்தித்துப் பேச வேண்டும்.
  • சிறு துரும்பும் பல்லுக் குத்த உதவும் - பயனில்லாமல் ஒன்றுமில்லை
  • போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து - திருப்தியே சிறந்தது
  • அன்பான சிநேகிதனை ஆபத்தில் அறியலாம் - ஆபத்தில் உதபுபவனே உண்மையான நண்பன்
  • உப்பில்லாப் பண்டம் குப்பையிலே - தேவையானது இருக்க வேண்டும்
  • மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா? - போலியைக் கண்டு ஏமாறக்கூடாது
  • வெள்ளம் வருமுன் அணை கட்ட வேண்டும்  - முன்னாயத்தமாக இருத்தல்
  • மின்னுவதெல்லாம் பொன்னல்ல - கவர்ச்சியானவை  எல்லாம் நல்லதல்ல
  • சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது - அனுபவம் ஆபத்தைக் குறைக்கும்/ அனுபவத்தில் கற்றல்
  • விளையும் பயிரை முளையிலே தெரியும் - சிறுவயதுச்  செயல்களை வைத்து எதிர் காலத்தைக் கணிப்பிட முடியும்.
  • துள்ளுகிற மாடு பொதி சுமக்கும் - அடக்கம் இல்லாவிட்டால் துன்பம் வரும்

பயிற்சிகள்
கீறிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து பழமொழிகளைக் தருக.


  1. அகத்தின் .......................................முகத்தில் தெரியும்.
  2. அளவுக்கு ......................................... அமுதமும் நஞ்சு.
  3. ஆத்திரக்காரனுக்கு .................................. மத்திமம்.
  4. இளமையிற் கல்வி .................................... எழுத்து.
  5. கடுகு சிறிதானாலும் ................................ பெரிது.
  6. பழகப் பழக ............................... புளிக்கும்.
  7. சிறு துளி பெரு .......................................
  8. சூடு கண்ட பூனை .................................... நாடாது.
  9. கண்டது கற்க .................................... ஆவான்.
  10. ஆற்றிலே போட்டாலும் ................................ போடு.
  11. பேராசை ................................... தரித்திரம்.
  12. உபிட்டவரை ..................................... நினை.
  13. தொட்டில் பழக்கம் ............................. மட்டும்.
  14. பதறாத ...................... சிதறாது.
  15. முயற்சியுடையார் ............................... அடையார்.
  16. வல்லவனுக்குப் ............................. ஆயுதம்.
  17. புத்திமான் ..............................................
  18. நிழலின் ................................. வெயிலில் தெரியும்.
  19. உப்பில்லாப் பண்டம் ............................................
  20. எறும்பூரக் ................................................


6 comments:

  1. கோடி நன்றிகள்!!!👍

    ReplyDelete
  2. அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும்

    ReplyDelete
  3. "போச்சுப் பல்லக்கு தம்பி கால் நடை"எனும் பழமொழியின் பொருள்

    ReplyDelete
  4. நன்றி ������

    ReplyDelete