Kaduraikal for Primary/Secondary

காலைக்காட்சி

காலைக் காட்சி - கட்டுரைகுறிப்புகள்
  • அதிகாலை நிகழ்சிகள்
  • சூரியன் உதிக்கும் அழகு
  • காலை நிகழ்ச்சி
  • காலைப் பொழுதும் புலவர்களும்

அதிகாலையிலே அங்கும் இங்குமாகச் சேவல்கள், "சூரியபகவானே வருக; விரைந்து வருக" என்று சிறகடித்துக் கூவுகின்றன. அப்பொழுது மெல்ல மெல்லக் கிழக்குத்திசை வெளுக்கத் தொடங்கிறது. அதனைக்கண்ட காகங்கள், சூரியன் வருகையைக் கட்டியங் கூறுவது போன்று "கா, கா" எனக் கத்திக்கொண்டு பறக்கின்றன. உயர் மரக் கொப்புகளிலுள்ள பறவையினங்கள் பலவகை ஒலி எழுப்புகின்றன. பூமியெங்கும் ஒளி வெள்ளம் பரவுகின்றது. உலகப் பொருட்கள் யாவும் விளக்கமாகத் தோன்றுகின்றன. இருளிலே இரைதேடிய கொடிய விலங்குகள் தத்தம் இருப்பிடத்தை அடைகின்றன. இரவிலே முல்லைமலர்கள் போல விளங்கிய விண்மீன்கள் ஒளிமழுங்கி மறைகின்றன.
கீழ்வானில் மெல்ல மெல்லச் செவ்வொளி படருகிறது. அதனோடு பல நிறங்கள் கலந்து அழகிய சித்திரக்காட்சி அங்கே தோன்றுகின்றது. செம்பொன்னாற் செய்யப்பட்ட கோளம்போல ஆதவன் மெல்ல மெல்ல உதயஞ் செய்கிறான். ஆதவனின் பொற்கதிர்கள் தகதகத்துக் கண்ணை மயக்குகின்றன. அவன் மெல்ல வான முகட்டை நோக்கி உயருகிறான். மரஞ்செடி கொடிகளும் நீர் நிலைகளும் பொன்னொளி பட்டுச் சிரிக்கின்றன. சோலைகளிலே பலவகை மலர்கள் மலர்ந்து ஆதவனை வரவேற்கின்றன. குளங்களிலே தாமரை கதிரவனைக் கண்டு களிகொண்டு மலர்கின்றது. சுருங்கக் கூறின் உலகெங்கும் உள்ளத்தைக் கவரும் அழகுக் காட்சி விளங்குகிறது.
காலை மலர்ந்ததும் மக்கள் துயிலுணர்ந்து, புதிய ஒருநாளைக் காண்கின்றனர். திருக்கோவில்களில் மணியொலி கேட்கிறது. சங்குகள் முழகுகின்றன. பக்திப் பாடல்களும், வேதமந்திரங்களும் ஒலிக்கின்றன. உழவர்கள் ஏரும் எருதுங் கொண்டு வயல்களை நோக்கிச் செல்கின்றனர். ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் வீடு திரும்புகின்றனர். வீடுகளிலே பெண்கள் முற்றம் பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் போடுகின்றனர். சிறுவர்கள் பல்துலக்கி, முகம் கழுவி, கடவுளைத் தொழுது, தத்தம் பாடங்களைப் படிப்பதில் ஈடுபடுகின்றனர். பின்னர் காலை உணவை அருந்தி புத்தகங்களை எடுத்து, மாதா வழியனுப்ப பாடசாலை நோக்கிச் செல்கின்றனர். உத்தியோகத்தர், இயந்திரம் போலத் தத்தம் அலுவலகங்களை நாடுகின்றனன்ர். தொழிலார்கள் தத்தம் வேலைத் தலங்களை நோக்கி விரைகின்றனர். உலகம் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்குகின்றது.
பூமியை எம்மை வளர்க்குந் தாயெனவும், சூரியனை உலக வளர்சிக்கு உதவும் தந்தை எனவும் சுப்ரமணியபாரதியார் வருணிக்கிறார். புகழேந்திப் புலவர் நளவெண்பாவிலே, "காலை மலர்ந்த போது இரண்டு கூம்பின ; இரண்டு கண் விழித்தன" என அழகாகக் கூறுகிறார். கூம்பியன கடவுளைத் தொழும் அந்தணர் கைகளும், பகலில் கூம்பும் குமுத மலர்களுமாம். கண்விழித்தன உலகமும் தாமரை மலர்களுமாம். எம்மால் தங்கத் தாத்தா எனச் செல்லமாக அழைக்கப்படும் சோமசுந்தரப் புலவர்,

"கூரிரு ளகன்றது கூவின கோழி
குருவிக எழுந்தன மறைந்தன விண்மீன்
எரியிற் றாமரை இனமலர் மலரும்
இறையவன் கோவிலில் மணியொலி கேட்கும்
ஊரினிற் றொழில்புரி மாந்தர்கள் எழுந்தார்
உயர்மரக் கொம்புவிட் டோடின காக்கை
சேர்கிழக் கெனுந்திசை வெளுத்தது மெல்லச்
செங்கதி ரவனுத யஞ்செய்கி றானே."

என அழகாகக் காலைக் காட்சியைப் படம் பிடித்துக் காடியுள்ளார்.

நன்றி
கட்டுரை மஞ்சரி



நான் ஒரு கிளியானால்

குறிப்புகள்
    நான் ஒரு கிளியானால் - கட்டுரை
  • ஆரம்பம்
  • அழகும் சுதந்திரமும்
  • ஒருநாள் வாழ்வு
  • விருப்பு வெறுப்புகள்
  • முடிவு



படியாமல் விளையாடித் திரிந்ததற்காக, அப்பா என்னை அடித்தார். நான் அழுது கொண்டு முற்றத்தில் இருந்தேன். அப்பொழுது "கீ....கீ...கீ ..." என்று பல குரல்கள் ஒலித்தன. அண்ணாந்து பார்த்தேன். தென்னோலையில் நாலைந்து கிளிகள் இருந்து ஊஞ்சலாடின. அப்பொழுது "நானும் கிளியானால்......" என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.
நான் கிளியானால் என்னுடல் பச்சை நிறம் பெற்றுப் பொலிவுறும். கொவ்வைக் கனி போன்ற சிவந்த வளைந்த சொண்டு எவ்வளவு அழகுதரும். இயற்கை தந்த ஆரம் என் கழுத்தை அழகுசெய்யும். நினைத்த நேரத்தில் என் பச்சை வண்ணச் சிறகுகளை விரித்து வானத்திற் பறப்பேன். நான் சுதந்திரமாக விரும்பிய இடங்களுக்குப் பறந்து செல்வேன். என் தோழர்களுடன் கூடி நாள் முழுவதும் விளையாடுவேன். என்னை எவருந் தடுக்க மாட்டார்கள். என் அப்பாவோ அம்மாவோ என்னைக் கண்டிக்க மாட்டார்கள்; தண்டிக்கவும் மாட்டார்கள். நான் எவருக்கும் பயப்படமாட்டேன். ஆகா! அந்த வாழ்வு எவ்வளவு இனிமை நிறைந்திருக்கும்.
காலையில் எழுந்ததும் ஒரேயொரு வேலையே எனக்கிருக்கும். அதுதான் உணவு தேடுவது. அது மிகவும் இலகுவானது. காலையில் என் தோழருடன் கனி மரங்களை நாடிப் பறப்பேன். மாமரச் சோலையிலே மாங்கனிகளைச் சுவைத்துண்பேன். இடையிடையே எனது தோழர்களுடன் அளவளாவிச் சிரித்து மகிழ்வேன். காலையுணவு முடிந்ததும் அந்த மாஞ்சோலையிலேயே எங்கள் விளையாட்டிடம் ஆகிவிடும். சிலசமயம் எங்களிடையே பறக்கும் போட்டி நடைபெறும். எல்லோருமாகக் கிளம்பிச் சோலையைச் சுற்றி வட்டமடித்துப் பறந்துவருவோம். சிலசமயம் பேச்சுப் போட்டி நடைபெறும். மரகிளையில் அமர்ந்து ஒவ்வொருவராக "கீ..கீ" என்று பேசுவோம். சிலசமயம் எல்லோரும் ஒருமித்துப் பாடுவோம். எங்கள் ஆரவார ஒலியைக் கேட்டு சிறுவர்கள் ஓடிவருவார்கள்; எங்களைப் பார்த்து மகிழ்வார்கள். "பச்சைக் கிளியே வா வா வா; பாலுஞ் சோறும் உண்ண வா" என்று பாடுவார்கள். மத்தியான வேளையிலே மிளகாய்த் தோட்டங்களிற் போய்ச் சேர்வோம். அந்தச் சமயத்திலேயே தோட்டச் சொந்தக்காரன் அங்கே இருக்கமாட்டான். அங்கே செந்நிறமான மிளகாய்ப் பழங்களை விரும்பி உண்போம். சிலசமயம் ஏதாவது கொறிக்க வேண்டும் என்ற ஆசை தோன்றும். உடனே நான் பயறு செழித்து வளர்ந்துள்ள இடங்களுக்குப் படை எடுப்பேன். மாலையானதும் நான் தோழர்களை அழைத்துக்கொண்டு இருப்பிடத்திகுச் செல்வேன்.
எப்போதுமே எனக்குத் தனித்து வாழ்வது பிடிக்காது. உணவு தேடச் சென்றாலும், ஓய்வெடுத்துக் கொண்டாலும் நண்பர்களோடு சேர்ந்தே இருப்பேன். சிலர் எங்களைப் பிடித்துக் கூண்டில் அடைத்து வளர்ப்பர். அதனை நான் முழுமனத்தோடு வெறுப்பேன். ஐயோ! பாவம்! அடிமைப்பட்ட கிளிக்குச் சுதந்திரம் ஏது? எனது பரம்பரைப் பகைவன் பூனை. பூனையைக் கண்டால், நான் பறந்துவிடுவேன். இறைவன் படைத்த சிறகுகள் இருக்கும்போது எவரும் என்னைப் பிடிக்க முடியாது. அதனால் இறைவனுக்கு நன்றியுள்ளவனாய் இருப்பேன்.
நான் கிளியானால், கவலை இன்னதென்பதை யறியேன். அதனால், துன்பவும் இல்லை; துயரமும் இல்லை; ஏச்சுப் பேச்சும் இல்லை; பெற்றோரின் கண்ண்டிப்பும் இல்லை; தண்டனையும் இல்லை; பூரண சுதந்திரத்தை அனுபவிக்கும் வாய்ப்பே உண்டு; கவலையற்ற ஆனந்தமே உண்டு. இவ்வளவும் நான் கிளியானாலன்றோ கிட்டும்.

நன்றி
கட்டுரை மஞ்சரி




வகுப்புக் கதிரை (சுயசரிதை)

உடைந்த கதிரை - சுயசரிதைகுறிப்புகள்
  • ஆரம்பம் : கதிரையானமை
  • வகுப்புக்கு வந்த கதை
  • அடைந்த அனுபவங்கள்
  • இன்றுள்ள நிலை


இப்பொழுது எனது பெயர் கதிரை. நான் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த ஆறாம் வகுப்பில் இருக்கிறேன். ஒவ்வோராண்டும் மாணவர்கள் இவ்வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்புக்குச் செல்கிறார்கள். ஆனால், எனக்கோ வகுப்பேற்றம் இல்லை. என்ன செய்யலாம்! என்னை மரம் என்று நினைத்துவிட்டார்கள்!
நான் இந்த உருவம் பெறுவதற்கு முன் பல துன்பங்களை அடைந்தேன். அவற்றைக் கேட்டால் நீங்கள் கண்ணீர் சிந்துவீர்கள். நான் கதிரையாவதற்கு முன் அடர்ந்த வனமொன்றிலே முதிரை மரமாக நின்றேன். ஒருநாள் மரந்தறிப்போர் கூரிய வாளினால் என்னை அரிந்து வீழ்த்தினார்கள். கிளைகளை வெட்டினார்கள். என் தோலை உரித்தார்கள். தாங்கமுடியாத அத்துன்பங்களை எனது வலிமையினாலே தாங்கினேன். முதிரை மரத்துண்டுகளாய்க் கிடந்த என்னைத் தச்சு வேலை செய்பவன் ஒருவன் அரிந்தான். முழுமரம் பலபல துண்டுகளாயிற்று. அவன் அந்தத் துண்டுகளை அளவாகப் பொருத்தி இப்போதுள்ள என்னைச் செய்தான். கதிரை என்று எனக்குப் பெயரிடப்பட்டது.
அந்தச் தச்சுத் தொழிலாளி என்னைக் கடைக்காரன் ஒருவனுக்கு விற்றான். கடைக்காரன் தனது தளபாடக்கடையில் என்னை வைத்தான். அங்கு என்னைப் போன்ற பலர் இருந்தனர். அவர்களிலும் பார்க்க நான் அழகும் வலிமையையும் மிக்கவனாய் இருந்தேன். அங்கே எனக்கு எவ்வித வேலையுமில்லை. காலை தொடக்கம் மாலை வரை கடைவாயிலில் இருப்பேன். வீதி வழியாக மக்கள் பலர் செல்வார்கள். அவர்களிற் சிலர் நான் இருக்கும் கடைக்கு வருவார்கள். சிலர் அங்குள்ள சில பொருட்களை வாங்கிச் செல்வர். சிலர் முகத்தைச் சுளித்துக்கொண்டு திரும்புவர். அவர்களில் எவரும் என்னைத் திரும்பியும் பார்கவில்லை. எனக்கு இத்தகைய வாழ்க்கை வெறுத்து விட்டது. வேறெங்காவது செல்ல வேண்டுமெனத் துடித்தேன். ஒருநாள் உங்கள் பாடசாலை அதிபர் அந்தக் கடைக்கு வந்தார். அவர் என்னோடு என் தோழர்களிற் பதின்மரையும் விலைக்கு வாங்கினார். நாங்கள் எல்லோரும் வண்டியில் ஏற்றப்பட்டோம். அப்போது நான் புதிய வாழ்கை கிடைத்து விட்டது என மகிழ்ந்தேன். உங்கள் அதிபர் என்னையும் என் நண்பர்களையும் இப்பாடசாலைக்குக் கொண்டுவந்தார். எனது முதுகில் "VI" என இலக்கமிட்டார். மறுநாட் காலையில் என்னை இந்த வகுப்புக்கு அனுப்பிவைத்தார்.
நான் இந்தப் பத்துவருட காலத்தில் பல நூற்றுக் கணக்கான மாணவர்களைக் கண்டிருக்கிறேன். அவர்களிற் சிலர் நற்குணமுள்ளவர்கள். சிலர் மிகுந்த கெட்டிக்காரர்கள். அவர்களைப் பார்க்கும்போது நான் பூரிப்படைவேன். படிப்பிற் குறைந்தவர்களுக்காகப் பரிதாபப்படுவேன். சிலர் துட்டர்கள்; மற்றைய மாணவர்களோடு சண்டை செய்வார்கள். சில சமயம் என்னையும் துன்புறுத்துவார்கள். அவர்கள் மீது சினம் கொள்வேன். பின்னர் அவர்கள் ஆசிரியரிடம் அடி வாங்கி அழுவார்கள். அப்போது நானும் அவர்களுக்காக அழுவேன். நான் ஆசிரியர்கள் பலரைக் கண்டிருக்கிறேன். அவர்களிற் சிலர் அன்போடு, விளக்கமாகப் பாடங் கற்பிப்பர். அவர்கள் வருகைக்காக நான் தவங்கிடப்பேன். சிலர் முன் கோபக்காரர்; முன் பின் யோசியாமல்  தண்டிப்பார்கள். அவர்கள் வந்துவிட்டால் வகுப்பே களை இருக்காது. அவர்கள் எப்போது இங்கிருந்து போவார்கள் என எண்ணுவேன். பெரிய கொண்டாட்டங்கள் நடைபெறும் போது சில சமயம் என்னை மேடையில் ஏற்றுவார்கள். ஒருமுறை இந்த நாட்டு மந்திரி ஒருவரைத் தாங்கும் பேறு எனக்குக் கிடைத்தது. இவையெல்லாம் பழங்கதை.
இப்பொழுது நான் கிழவனாகி விட்டேன். என் கால்கள் தள்ளாடுகின்றன. காற் பொருத்துக்கள் சோருகின்றன. கையிரண்டும் முறிந்துவிட்டன. நான் மிகுந்த கிழவனாகி விட்டதாக ஆசிரியர்கள் அதிபரிடம் முறையிடுகிறார்கள். விரைவில் எனக்கு ஓய்வு கிடைத்துவிடும்.

நன்றி
கட்டுரை மஞ்சரி




தந்தைக்குக் கடிதம்

தந்தைக்குக் கடிதம்
குறிப்புக்கள்
  • இடமும் திகதியும்
  • கடித ஆரம்பமும் சுகம் விசாரித்தலும்
  • கடிதச் செய்தி
  • முடிவு


கனகசபை வீதி,
மானிபாய்,
20/5/1968.

அன்பு நிறைந்த அப்பாவுக்கு, எனது தாழ்மையான வணக்கம். இங்கே அம்மாவும் அன்புத் தம்பி தங்கையரும் நானும் இறைவனின் பேரருளினால் நலமுடையோம். அவ்வண்ணமே தாங்களும் நலமுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறோம்.
தங்கள் அன்பான கடிதம் கிடைத்தது. தாங்கள் எழுதிய செய்தியனைதையும் வாசித்தறிந்து மிக மகிழ்ந்தோம். தாங்கள் எழுதிய வண்ணம் என் அருமைத் தாயாரின் சொற்கேட்டு நடக்கிறேன். தாங்கள் முன்னர் ஒரு கடிதத்தில் "அரனை மறவேல்", "முயற்சி திருவினை ஆக்கும்", "ஒழுக்கம் விழுப்பந்தரும்" என்று மூன்று மகா வாக்கியங்களை எழுதியிருந்தீர்கள். அவைகளை நான் மந்திரங்களாகப் போற்றி, மனத்தில் இருத்திக்கொண்டேன். அவற்றின் பயனை நான் தெளிவாக உணரமுடிகிறது. முதலாம் பருவத் தேர்விலே பத்தாவது இடத்தைப் பெற்ற நான், கடந்த வாரம் நடைபெற்ற இரண்டாம் பருவத் தேர்வில் மூன்றாவது இடத்தை அடைந்திருக்கிறேன். மேலும் முயன்று அடுத்த பருவத்தில் முதலாமிடத்தை அடைவேன் என எண்ணுகிறேன். அன்றியும் இப் பருவத்தில் ஒழுக்கத்துக்குரிய முதற் பரிசு எனக்குக் கிடைத்திருக்கிறது. இவற்றை தாங்கள் வாசிக்கும் போது தங்கள் மகனைப் பற்றிப் பெருமை அடைவீர்கள் என்று எண்ணுகிறேன்.
தாங்கள் சென்ற வாரம் அனுப்பிவைத்த ஆறு புத்தகங்களில் இரண்டைப் படித்து முடித்துவிட்டேன். அவற்றுள் ஒன்று ஆபிரகாம் லிங்கனைப் பற்றிய கதை. அவரது வரலாறு என் நெஞ்சை உருக்கி விட்டது. சின்னச்சிறு வயதில் வறுமையின் கோரப்பிடியிற் சிக்கி அல்லலுற்ற அவர், நேர்மையோடும் பணிவோடும் வாழ்ந்து, இரவலாகப் புத்தகங்களைப் பெற்றுப் படித்து முன்னேறிய கதை எம்போன்ற சிறுவர்களுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. அப்பா, அத்தகைய பெரியார்களின் வரலாறுகளைப் படிக்கப் பெராவலுடையேன் . தயவு கூர்ந்து சமயம் வாய்க்கும்போது அவற்றை அனுப்பிவையுங்கள்.
என் தம்பி தங்கையருடன் மிக அன்பாக இருக்கிறேன். மாலை நேரத்தில் அவர்களுடன் சேர்ந்து விளையாடுவதே எனது பொழுதுபோக்கு. என் சின்னத்தங்கை இப்பொழுதுதான் மெல்ல அடி எடுத்து வைத்து நடக்கத் தொடங்குகிறாள். அவள் விழுந்தும் எழுந்தும் தள்ளாடித் தள்ளாடி நடப்பதை நீங்கள் பார்த்தால் எவ்வளவு ஆனந்தப்படுவீர்கள். அவள் தனது அரிசிப்பல்லைக் காட்டிச் சிரிக்கும்போது எவ்வளவு அழகாய் இருக்கிறாள் தெரியுமா? ஆனால், பெருவிரல் சூப்புவதை மாத்திரம் விடுகிறாளில்லை.
முந்தநாள் எங்கள் வீட்டுக்கு சிவகுரு மாமா வந்தார். அவர் என்னை கீரிமலைக்கு அழைத்துச் சென்றார். நீலக்கடல் தனது அலைக் கரங்களை அடித்தடித்து ஆரவாரித்தது. இடைவிடாமல் ஒன்றின்பின் ஒன்றாக அலைகள் வெண்ணுரை கக்கிக் குதித்து விளையாடின. அந்த மாலை வேளையிலே சூரியன் மேற்கே மறைந்த அந்தக் காட்சி இப்பொழுதும் என் கண்னுள்ளே நிற்கிறது. அந்த நேரத்தில் மேல்வானம் போர்க்களம் போலச் சிவந்து தோன்றியது.
அப்பா, முன்னரே சொல்லவேண்டிய ஒன்றை மறந்துவிட்டேன். சென்றவாரம் எங்கள் பாடசாலையில் விளையாட்டுப் போட்டி நிகழ்ந்தது. அன்று கீழ்ப்பிரிவுக்குரிய மூன்று நிகழ்சிகளிற் பங்குபற்றினேன். சொன்னால், ஆச்சரியப்படுவீர்கள்! எங்கள் பாடசாலையிற் கீழ்பிரிவு வெற்றி வீரன் நானே. வேறு விசேடமில்லை. வணக்கம்.

இங்ஙனம்,
தங்கள் அன்புள்ள மகன்,
தேவேந்திரன்


நன்றி
கட்டுரை மஞ்சரி




நான் கண்ட கனவு

நான் அடர்ந்த ஒரு காட்டின் மத்தியில் நிற்கிறேன். திக்குத்திசை தெரியவில்லை. எங்கும் இருள் கவிந்திருக்கிறது. என்னுடன் வந்த நண்பர்கள் எங்கோ மறைந்து விடுகிறார்கள். நான் தனியனாய் நிற்கிறேன். அங்குமிங்கும் பறக்கின்ற மின்மினியின் ஒளியைத் தவிர வேறொரு ஒளியையும் நான் காணவில்லை. பயத்தினால் என்னுடல் நடுங்கிறது. வியர்வை ஆறாய் ஓடுகிறது. எங்கு செல்வது என்று தெரியவில்லை.
அப்போது இரு நெருப்புக் கொள்ளிகள் என்னை நோக்கி வருகின்றன. அதன் வருகையால், என்முன்னேயுள்ள செடிகொடிகள் சலசலக்கின்றன. புலியொன்று என்னை நோக்கி வருகிறது என உணர்ந்து நடுங்குகிறேன்.
பயத்தினாற் கால்போன திசையில் ஓடுகிறேன். என்ன ஆச்சரியம்! என் கால்கள் நிலத்திற் படவேயில்லை. ஆகாயத்திலே பறப்பது போல உணருகிறேன். அப்பொழுது என் முன்னே ஒளிமயமான அழகிய மாளிகை ஒன்று தோன்றுகிறது.
அந்த மாளிகையில் எவ்வித யோசனையுமின்றி நுழைந்துவிடுகிறேன். உள்ளிருந்து மெல்லிய இன்னிசை காற்றிலே தவழ்ந்து வருகிறது. ஆண்களும் பெண்களுமாகப் பலர் சேர்ந்து பாடுகின்றார்கள். அவர்கள் யாரென்பது எனக்குத் தெரியாது. என்னைக் கண்ண்டதும் எல்லோரும் எழுந்து நிற்கிறார்கள். அவர்கள் மனமகிழ்வோடு கரங்களை நீட்டி என்னை வரவேற்கிறார்கள்; என் பெயரைச் சொல்லி அழைக்கிறார்கள். இவர்களுக்கு எப்படி என் பெயர் தெரிந்தது? அதனால், நான் வியப்படைந்து திகைத்து நிற்கிறேன்.
அப்பொழுது இரு இளம் பெண்கள் என்னை நோக்கி வருகிறார்கள். அவர்கள் என்னைப் பார்த்துப் புன்முறுவல் பூக்கிறார்கள். என்னிரு கைகளையும் பிடித்து அன்போடு அழைத்துச் செல்கின்றார்கள். அவர்களோடு சென்று பெரியதொரு மண்டபத்தை அடைகிறேன். அங்கே அழகிய மேசை யொன்றிற் பலவகை உணவுப் பண்டங்கள் காணப்படுகின்றன. அவற்றினைக் கண்ட என் நாவில் நீர் ஊறுகின்றது. கொடிய பசியினால் அவற்றை இரண்டு கைகளினாலும் வாரிவாரி உண்கின்றேன். குடங்குடமாகத் தண்ணீர் குடிக்கின்றேன். என் பசி அடங்குகின்றது. அதன்பின் மகிழ்வுடன் ஆடிப் பாடுகின்றேன். எனது செயலைக் கண்ட அப்பெண்கள் சிரிக்கின்றார்கள்.
அப்பொழுது என்னை நோக்கி ஒருவன் வருகின்றான். அவனை நான் கூர்ந்து பார்கின்றேன். அவன் தலையில் இரு கொம்புகள் முளைக்கின்றன. சிறிது நேரத்தில் ஆட்டுக்கடாத் தலையுடையவனாய் அவன் மாறுகின்றான். அவனது விசித்திர தோற்றத்தைப் பார்த்துப் பெருங் குரலெடுத்துச் சிரிக்கின்றேன். என் சிரிப்பொலியைக் கேட்டுப் பலர் அங்கே வருகின்றார்கள். அவர்கள் எல்லோரும் ஆட்டுகடாத் தலையர்கள். அதனால் நான் விழுந்து விழுந்து சிரிக்கின்றேன்.
அப்பொழுது முன்னர் கண்ட பெண்கள் அங்கே வருகின்றார்கள். அவர்கள் கைகளிலே வாள்கள் கிடந்து பளபளகின்றன. அவர்கள் கோபத்தோடு என் மீது வாளை வீசுகின்றார்கள். ஓங்கிய அவர்கள் கைகளைப் பலமாகப் பிடித்துக் கொள்கின்றேன். இந்நிலையில் ஆட்டுகடாத் தலையர்கள் என்னைச் சூழ்ந்து கொள்கின்றார்கள். நான் தனியனாய் நின்று அவர்களை எதிர்த்தல் இயலுமா? அதனால், அவர்களுக்கு அகப்படாமல் ஓடுகின்றேன். என்னைத் துரத்திக் கொண்டு அவர்கள் வருகின்றார்கள்; நான் காற்றாய்ப் பறக்கின்றேன்.
அப்பொழுது கல்லில அடிபட்டு ஒரு பாழ்ங் கிணற்றில் 'தொப்' என்று விழுகின்றேன் . அச்சமயம் 'ஐயோ! அம்மா!' என்று கத்திக் கொண்டு கண் விழிக்கின்றேன். நான் கண்டது ஒரு கனவு.



நன்றி
கட்டுரை மஞ்சரி






"பாடசாலை விடுமுறைக் காலத்தை நான் கழித்தவிதம்"
  • நான் எனது பாடசாலை விடுமுறையில் ஒரு அழகிய பூங்காவிற்குச் சென்றேன் .
  • அங்கு இருந்த புல் வெளிகள் பச்சைக் கம்பளம் விரிந்தது போன்று காட்ச்சியளித்தது.
  • அங்கே மலர்ந்திருந்த மலர்கள் என் மனதை கொள்ளை கொன்றன.
  • வீட்டு முற்றத்தில் ஒரு அழகிய பூந்தோட்டம் அமைத்தேன்.
  • நூலகத்துக்குச்சென்று பல நூல்களை வாசித்து மகிழ்ச்சியடைந்தேன்.
விந்தை மிகு வானம் 
  • வானத்தில் சூரியன் தகதகவென தங்கப்பதக்கம் போல் காணப்படுவது அதிசயம் ஆகும்.
  • விந்தைமிகு வானத்தில் ஏழு அழகான நிறங்களுடன் வானவில் தோன்றுவது பிரமிப்பானது.
  • இரவில் சந்திரன் நட்சத்திரத்துடன் கறுப்பு நிற வானத்தில் மனதைப் பரவசப்படுத்தும்.
பயிற்சிகள் 
கீழ் வரும் தலைப்புகளுக்கு மூன்று வாக்கியங்கள் எழுதுக.
ஒவ்வொரு வாக்கியமும் ஐந்து சொற்களுக்குக் குறையாமல் இருக்க்க வேண்டும்.
எழுவாய் பயனிலை திருத்தமாக இருக்க வேண்டும்.

  • "எனது அன்பான ஆசிரியர்"
  • "நல்ல மனிதர்களிடம் இருக்க வேண்டிய சிறந்த பழக்க வழங்கங்கள் "
  • "தேசியக் கொடி "
  • "காடுகளை அழிப்பதால் ஏற்படும் தீமைகள்."
  • "ஒரு பேனாவின் சுயசரிதை"
  • "நாம் பேற்றோரை மதிக்க வேண்டும்"
  • "நான் சென்ற நூல் நிலையம்"



2 comments:

  1. க்க்க்க்ஜ்க்க்க்க்க்க்க்ஒகொஹ்கொ

    ReplyDelete
  2. நான் கண்ட மாலை காட்சி கட்டுரை வேணும்

    ReplyDelete