Sunday, October 7, 2018

Saraswathi Pajanai - சரஸ்வதி பஜனைப் பாடல்கள்

Saraswathi Bhajans

சரஸ்வதி அந்தாதி

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய வுணர்விக்கு மென்னம்மை - தூய
வுருப் பளிங்கு போல் வாளென் உள்ளத்தின் உள்ளே
யிருப்பளிங்கு வாரா திடர்.

- கம்பர்


தாவறு முககெலாந் தந்த நான் முகந்
தேவுதன் துணைவியாய்ச் செறிந்த பல்லுயிர்
நாவுதோ றிருந்திடு நாங் கொள் வாணிதன்
பூவடி முடி மிசைப் புனைந்து போற்றுவாம்.

(கந்தபுராணம்)


வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் - வெள்ளை
அரியாசனத்தில் அரசரோ டெம்மை
சரியாசனம் வைத்தாய்

படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்
கல்லுஞ்சொல் லாதோ கவி.

(காளமேகப் புலவர்)


பாடல்

பல்லவி
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்துப் பாட வந்தோம் - அம்மா
பாட வந்தோம் - அம்மா பாட வந்தோம்.
அருள்வாய் நீ இசை தர வாநீ
இங்கு வருவாய் நீ நலம் தரவே நீ - அம்மா

(மாணிக்க


அனுபல்லவி
நாமணக்கப் பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
பூமணக்கப் பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்

(மாணிக்க


சரணம்
வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள் எங்கள்
உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாள்.
கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்
அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீயே
வாணி சரஸ்வதி , மாதவி, பாரதி, வாயதீஸ்வரி, மாலினி
காணும் பொருளில், தோன்றும் கலைமணி,
வேண்டும் வரம் தரும் வேணீ.
நான் முகன் நாயகி, மோஹன ரூபினி
நாண் மறை போற்றும் தேவி நீ.
வானவற் கமுதே, தேனருள் சிந்தும்
கான மனோகரி, கல்யாணி
அருள்வாய் நீ, இசை தர வாநீ
இங்கு வருவாய் நீ, நலம் தரவே நீ - அம்மா

(மாணிக்க


சரஸ்வதி சிந்தனை

புத்தகத் துள்ளுறை மாதே
பூவில் அமர்ந்துறை வாழ்வே
வித்தகப் பெண்பிள்ளை நங்காய்
வேதப் பொருளுக் கிறைவி
முத்தின் குடையுடை யாளே
மூவுலகுந் தொழு தேவி
செப்பு கவித்தன முலையாய்
செவ்வரி ஓடிய கண்ணாய்
முத்து நிறத்து வெண்பல்லாய்
முருகம் பூ மேனி நிறத்தாள்
தக்கோலந் தின்ற துவர்வாயாய்
சரஸ்வதி என்னுந் திருவே
எக்காலும் உன்னைத் தொழுவோம்
எழுத்தறி புத்தி பண்ணுவிப்பாய்
ஆக்காய் எம் பெருமாட்டி
அழகிய பூவணை மீதாய்
நோக்காய் என் மிடி தீர
நொடிக்கும் பிராமணத்தி நோக்காயே
சாலு நெல்லரிசி கொண்டு
சரஸ்வதி பூஜை பண்ணி
பாலோடு பழத்தை நிரப்பி
பராவித் தொழுவோம் நங்காய்
நங்காய் நங்காய் நமஸ்து
ஞானக் கொழுந்தே நமஸ்து
கல்விக் கரசே நமஸ்து
கணக்கறி தேவி நமஸ்து
சொல்லும் பொருளே நமஸ்து
சூச்சும ரூபி நமஸ்து.




No comments:

Post a Comment