Saturday, December 12, 2020

Atmosphere in Tamil

வளிமண்டலம்

வளிமண்டலமானது புவியைச் சுற்றி கோள வடிவில் பரந்து காணப்படும் வாயுப்படலமாகும். அது தரைமட்டத்தில் இருந்து 700km உயரம் வரை வியாபித்துக் காணப்படுகிறது.
வளியின் நிறை காரணமாக எம்மீதும் எம்மைச் சூழவுள்ள அனைத்தின் மீதும் அமுக்கம் தொழிற்படுகின்றது. இவ்வமுக்கம் வளிமண்டல அமுக்கம் எனப்படும். வளிமண்டல அமுக்கம் மில்லிபார் (mb) எனும் அளவுத்திட்டத்தில் அளக்கப்படும்.
கடல் மட்டத்திலிருந்து யாதேனும் பிரதேசத்திற்கு உள்ள உயரம் குத்துயரம் (Altitude) அல்லது கோணவேற்றம் எனப்படும். குத்துயரத்திற்கேற்ப வெப்பநிலையும் (Temperature), அமுக்கமும் (Pressure) வேறுபடும்.
இவ்வேறுபாட்டை அடிப்படியாகக் கொண்டு வளிமண்டலம் பிரதானமாக 5 படைகளாக வகைப்படுத்தப்படும். இப்படைகளின் எல்லைகள் திட்டமாக வரையறுக்கப்பட முடியாதவை.

  1. மாறன் மண்டலம் (Troposphere)
  2. படை மண்டலம் (Stratosphere)
  3. இடை மண்டலம் (Mesosphere)
  4. வெப்ப மண்டலம் (Thermosphere)
  5. மேன் மண்டலம் (Exosphere)
மாறன் மண்டலம்படை மண்டலம்இடை மண்டலம்வெப்ப மண்டலம்மேன் மண்டலம்
கடல் மட்டத்திலிருந்து 15km உயரம் வரை 


15km - 50km50km - 80km80km - 100km100km -
வளி மண்டல வாயுக்களில் 75% மும், பெருமளவு தூசுத் துணிக்கைகளும், நீராவியும்  இங்கே காணப்படும்.நீராவி குறைந்தளவு உண்டு. வளி உலர்ந்து இருக்கும்.நீராவி பனி முகில்களாக மிதக்கும். சூரியன் மறையும் போது இரவு வானில் இம்முகில்களை அவதானிக்கலாம். இப்பிரதேசத்திற் காணப்படும் வாயுத் துணிக்கைகளால் சூரிய வெப்பம் உறிஞ்சப்படும்.
வானிலை மாற்றங்கள் காணப்படும்.புயல்களோ, வளிக் குழபங்களோ இல்லை.மிகவும் குளிர்ச்சியான படைவெப்பநிலை மிகவும் அதிகம்.மிகவும் மெல்லிய படை
உலங்குவானூர்தி, வீழ்காவலி, ஆகாய விமானங்கள் பயணிக்கும்.ஜெட் விமானங்கள் பயணிக்கும்.சர்வதேச விண்வெளி ஆய்வு மத்திய நிலையம் (ISS) இங்கே அமைக்கப் பட்டுள்ளது.
ஓசோன்படை  காணப்படும். தீங்கு விளைவிக்கும் சூரியக் கதிர்ப்புக்கள் (Ultra violet rays)புவியை அடையாமல்த் தடுக்கும். இங்கே காற்று ஒரே திசையை நோக்கி வீசுவதால் மழை மேகங்கள் (திரண் முகில்கள்) இப் படையை அடையும் போது உச்சி தட்டையாகிறது.வட துருவத்தை அண்மித்த பிரதேசங்களில் வானில் வடமுனைச் சோதி (Aurora Borealis) ஒளிப் பிளம்பையும், தென் துருவத்தை அண்மித்த பிரதேசங்களில் தென் முனைவுச் சோதி (Aurora,  Australis) ஐயும் அவதானிக்கலாம். 

Atmosphere Layers in Tamil


வளி மண்டலத்தில் நாம் வாழும் படை மாறன் மண்டலமாகும். இவ்மாறன் மண்டலத்தில் குத்துயரம் அதிகரிக்கும் போது வெப்பநிலையும் அமுக்கமும் குறைவடையும்.

தரை மட்டத்திலிருந்து மேல் நோக்கிச் செல்லும் போது வளிமண்டலத்தின் ஒவ்வொரு படையிலும் வெப்பநிலை வேறுபடும் விதம் கீழே தரப்பட்டுள்ளது.

Atmosphere in tamil

  • மாறன் மண்டலம் வழியே மேல்நோக்கிச் செல்லும் போது வெப்பநிலை குறைவடையும். சூரிய வெப்பத்தினால் தரையும், கடலும் வெப்பமடையும். இதனால் தரையை அண்டிய பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக இருக்கும்.

  • படை மண்டலம் வழியே மேல்நோக்கிச் செல்கையில் வெப்பநிலை அதிகரிக்கும். இதற்குக் காரணம் ஓசோன் படையின் தொழிற்பாடாகும். ஓசோன் படை சூரியனிலிருந்து வரும் கழியூதாக் கதிர்களை (Ultra violet rays) உறிஞ்சி வெப்பமடைவதனால் படை மண்டலத்தின் வெப்பநிலை அதிகரிக்கும்.

  • இடை மண்டலத்தில் மேல்நோக்கிச் செல்லும் போது வெப்பநிலை குறைவடையும். ஓசோன் வாயுவின் அளவு குறைவாக இருப்பதே காரணம். இதன் வெப்பநிலை -90 பாகை செல்சியஸ் ஆகும்.

  • வெப்பவலயம் வழியே மேல் நோக்கிச் செல்லும் போது மீண்டும் வெப்பநிலை அதிகரிக்கும். இங்கு காணப்படும் வாயுத் துணிக்கைகள் மூலம் சூரிய சக்தி அதிகளவு உறிஞ்சப்படுவதே இதற்குக் காரணம்.

அங்கிகளுக்கு மாறன் மண்டலத்திலிருக்கும் வளிக் கூறுகள் மிகவும் முக்கியமானவை. கீழே உள்ள அட்டவணை அதைக் காட்டுகிறது.

வாயு வகைகள் கனவளவு சதவீதம்பயன்கள்
நைதரசன் 78.09அங்கிகள் ஆக்கப்பட்டுள்ள புரதத்தின் முக்கிய கூறு, தாவரங்கள் மண்ணிலிருந்து பெற்றுக் கொள்ளும் அத்தியாவசிய மூலகம், செயற்கைப் பசளை தயாரிப்பதற்குத் தேவையானது. சில இரசாயனக் கைத் தொழில்களின் மூலப்பொருள்.
ஒட்சிசன்20.95அங்கிகள் சுவாசிக்க, பொருட்களின் தகனத்திற்கு (தகனத்துணையி), வளியில் உள்ள ஒட்சிசன் வேறாக்கப்பட்டு பின்வரும் தேவைகளுக்குப் பயன் படுத்தப் படுகின்றது.
சுவாசிக்கச் சிரமப்படும் நோயாளிகளுக்கு, சுழியோடிகளுக்கு, விண்வெளிப் பயணிகளுக்கு, அசற்றலீன் சுவாலை மூலம் உலோகங்களைக் காச்ச
ஆகன்0.93இது தாக்குதிறனற்ற வாயு (விழுமிய வாயு), பயன்பாடுகள் மின்குமிழ்களினுள் நிரப்ப, செம்மஞ்சள் நிற ஒளியைத் தரும் மின்குமிழ் தயாரிக்க, மிகவும் பழமை வாய்ந்த ஆவணங்களைப் பாதுகாக்க( ஆகன் நிரப்பப்பட்ட பாத்திரத்தினுள் வைத்தல்) 
காபனீரொட்சைட்டு0.03பச்சைத் தாவரங்களின் ஒளித்தொகுப்பு, தீயை அணைக்க(தகனத்துணையிலி), வளி மண்டல வெப்பநிலை சீராக்கலுக்கு 
நீராவிவேறுபடும்
பிற வாயுக்கள்மிகச் சிறிய அளவிற் காணப்படும்

வளிமண்டல்த்தினால் கிடைக்கும் பயன்கள்

  • தாவரங்கள் விலங்குகள் சுவாசிக்க ஓட்சிசனைத் வழங்கும்.
  • பச்சைத் தாவரங்களின் ஒளித்தொகுப்பிற்குத் தேவையான காபனீரொட்சைட்டை வழங்கும்.
  • தாவர வளர்ச்சிக்கத் தேவையான நைதரசனை மண்ணுக்கு வழங்கும்.
  • ஓசோன் படை மூலம் கழியூதாக் கதிர்ப்பால் ஏற்படும் பாதிப்பு தவிர்க்கப்படும்.
  • புவியிலுள்ள வெப்பம் விண்வெளிக்கு வெளியேறிச் செல்லாமல்த் தடுக்கும். சந்திரனில் வளிமண்டலம் இல்லாமையால் இது நடை பெறுவதில்லை. பகலில் அதிக வெப்பமும், இரவில் அதிககுளிருமாக இருக்கின்றது.
  • நீர் வட்டம் நடைபெற வளி மண்டலத்தில் உள்ள நீராவி உதவுகின்றது.
  • விண்வெளியில் இருந்து வரும் விண்கற்கள் வளிமண்டலத்துடனான உராவினால் வெப்பமடைந்து எரிந்துவிடும்.
  • பறவைகளும் சில பூச்சிகளும் பறப்பதற்கு உதவும்.
  • ஒலியைக் கடத்த உதவும்.

வளி மாசடைதல்

வளிமண்டலத்துடன் பல்வேறு பதார்த்தங்கள் சேர்வதன் காரணமாக் அதன் இயல்பானநிலை மாற்றமடைதல் வளி மாசடைதல் (Air Pollution) எனப்படும். வளி மாசடைவதற்குக் காரணமாண கூறுகளை இரண்டாகப் பிரிக்கலாம்.

  • வாயுநிலை மாசாக்கிகள் : உ+ம்:-காபனீரொட்சைட்டு, கந்தகவீரொட்சைட்டு, நைதரனீரொட்சைட்டு
  • துணிக்கை நிலை மாசாக்கிகள். உ+ம்:- காபன் துணிக்கைகள், எரியாத எரிபொருள் சிவிறல்கள், விவசாய இரசாயனப் பொருள் சிவிறல்கள், சீமெந்துத் தூள்


வளி மாசடையும் முறைகள்

  • வாகனங்கள் வெளிவிடும் வாயுக்கள்(புகைகள்)
  • தொழிற்சாலைகளும் அனல் மின்னுற்பத்தி நிலையங்களும் வெளியேற்றும் கழிவுகள்
  • குப்பைகளை எரிப்பதன் மூலம் வெளியிடப்படும் பதார்த்தங்கள்.
  • காடுகளை அழித்தல்
  • எரிமலை குமுறல்


வளி மாசடைவதால் ஏற்படும் பாதகமான விளைவுகள்

  • புவியின் காலநிலையில் மாற்றங்கள் ஏற்படல்
  • சுவாசம், நுரையீரல் சம்பந்தமான நோய்கள் ஏற்படல்
  • அமில மழை தோன்றல்
  • சூழல் வெப்பநிலை உயர்வடைதல்
  • வளியின் ஊடு காட்டும் இயல்பு குறைவடைதல்


வளி மாசடைவதைக் குறைைக்கும் வழிகள்

  • சுவட்டு எரிபொருட் பாவனையைக் குறைத்தல்
  • சூழல் நேய எரிபொருட்களைப் பயன்படுத்தல்
  • தொழிற்சாலைக் கழிவுகளை வடிகட்டிகளினூடாக வெளியேற்றல்
  • குப்பைகளை எரிக்காமல் மீள்சுழற்சிக்குட்படுத்தல்
  • காடுகளைப் பாதுகாத்தல்
  • காடுகளை மீளவுருவாக்கல்

No comments:

Post a Comment