உழவர் திருநாள், தமிழர் திருநாள், தைப்பொங்கல், அறுவடைத்திருநாள் எனப் பலவாறு கூறப்படும் பொங்கல் பண்டிகை தமிழர் பண்டிகையாகும். பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகப் கொண்டாடப்படும் ஒரு தனிப் பெரும் விழா. பொங்கல் உழைக்கும் மக்கள் இயற்கைக்கும் மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. பொங்கல் வருகிறது என்றால் அதற்கான ஆரவாரங்கள் முன்னதாகவே ஆர்பரிக்கத் தொடங்கிவிடும்.
பொங்கல் என்பதற்கு சாப்பிடும் பொங்கல் என்று பொருள் அல்ல. பொங்கிப் பெருகி வருவது என்று பொருள். தமிழர்கள் இருக்குமிடமெல்லாம் பொங்கல் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் வாழும் பட்டிதொட்டி யெல்லாம் குறிப்பாக இந்தியா, ஸ்ரீலங்கா, மலேஷியா, கனடா, சிங்கப்பூர், மொரிசியஸ் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் கூட விமர்சையாகக் கொண்டாடப் படுவது வழக்கம்.
பொங்கல் பண்டிகையின் தோற்றம் எப்போது என்று உறுதியாகத் தெரியவில்லை. 1000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது இந்த பண்டிகை என்று ஒரு கூற்று உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது கொண்டாடப்படுகிறது என்று இன்னொரு கூற்றும் உள்ளது. சோழர்காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு 'புதியீடு' என்று பெயர் இருந்தது. அதாவது ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். உழவர்கள் தை மாதத்தின் முதல் நாளில் அந்த ஆண்டின் முதல் அறுவடையை மேற்கொள்ளுவது வழக்கமாக இருந்தது. இதுதான் பின்னர் பொங்கல் பண்டிகையாக மாறியது என்கிறார்கள். ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கி சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.
பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும்.
போகி பண்டிகை
வீட்டிலுள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். போகிப் பண்டிகை இந்திரனுக்காக ஆயர்களால் கொண்டாடப்படும் விழாவாகும். போகி பண்டிகை என்பது 'மார்கழி' மாதம் முடிந்து 'தை' மாதம் ஆரம்பிக்கும் நேரம் வருகிறது. பழையன கழிந்து புதியன புகும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. பழையதாகி தேவையில்லாமல் ஆகிவிடட பொருட்களை இந்நாளில் எரித்து விடுகிறோம். ஒரு பண்டிகையாக, கொண்டாட்டமாக இதைச் செய்கிறோம். ஆயர்கள் இந்திரவிழாவை முடித்து சூரிய வழிபாட்டை தொடர்ந்தனர். அக்காலத்தில் போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் இருந்தது. அப்போது அழுவது எதனால் என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள் அந்நாளை புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.
தைப்பொங்கல்
தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியை சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கி சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழவே பொங்கல் விழாவாகும்.
பொங்கல் திருநாள் அன்று சூரியபகவானுக்கு பூஜை செய்து வழிபட்டால் பல நன்மைகள் ஏற்படும். இந்த நன்னாளில் நல்லநேரம் பார்த்து பொங்கல் பானையில் பொங்கல் செய்ய வேண்டும். பிறகு வடை, பாயாசம் 21 வகையான காய்கறிகளை கொண்டு சமைத்து சூரிய பகவானுக்கு படைத்து வணங்கும் போது 21 வகையான சமைக்காத பச்சை காய்கறிகளையும் வைத்து அத்துடன் மஞ்சள் கொத்து, இஞ்சிக்கொத்து, கரும்பும் வைத்து சூரிய பகவானுக்கு கர்ப்பூர ஆராத்தி காட்டி வணங்க வேண்டும்.
மாட்டுப்பொங்கல்
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கல் தினம் கால்நடைகளுக்கு நன்றியுடன் அர்பணிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வயல்களில் உழவு செய்து ஆண்டு முழுவதும் வண்டிகளை இழுத்து வந்த விலங்குகளுக்கு பெரும் கவனம் செலுத்துகின்றனர். இந்த விலைமதிப்பற்ற சேவைக்கு நன்றி தெரிவிக்க விலங்குகளைக் குளிப்பாட்டி சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை நிறங்களில் கொம்புகள் வர்ணிக்கப்படுகின்றன. அவர்களின் நெற்றிக்கண்ணில் மஞ்சள் மற்றும் குங்குமங்களை ஒட்டி, கழுத்துக்களுக்கு வண்ணமயமான மலைகள் அணிவிக்கப்படுகின்றன. அவைகளுக்குப் பூஜை செய்து பூஜை மற்றும் பொங்கல் நிறைய வழங்கப்படுகின்றது. இது மாட்டுப் பொங்கல் என்று அழைக்கப்படுகின்றது. "பட்டி பெருக! பால் பானை பொங்க! நோயும் பிணியும் தெருவோடு போக! என்று கூறி மாடுகள் பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.
காணும் பொங்கல்
இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார், உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல் கொண்டாடடங்களில் நான்காம் நாள் இடம்பெறும். இது பொதுவாக இந்தியாவிலேயே கொண்டாப்பிடப்படுகிறது. காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் என்று அழைப்பர். இந்நாளின் சிறப்பே 'கணுப்பிடி' தான். இது ஒருவகை நோன்பு, சுமங்கலிப் பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம். உடன்பிறந்த சகோதரர்களுக்க்காக பெண்கள் செய்யும் நோன்பு. உடன் பிறந்த சகோதரர்கள் நலமும் வளமுமாய் வாழ சகோதரிகள் வேண்டிக்கொள்ளும் நாளாகும்.
15/01/2019
வீரகேசரி
(வி.ரி.சகாதேவராஜா)
No comments:
Post a Comment