Thursday, March 19, 2020

ஒலி

Sound in Tamil

ஒலியைப் பிறப்பிப்பவை ஒலிமுதல்கள் எனப்படும்.
உ+ம் : விலங்குகள், இசைக்கருவிகள்

இயற்கையான ஒலிகள்
உ+ம் : காற்றின் ஒலி, பறவைகளின் ஒலி, நீர் வீழ்ச்சிகளின் ஒலி, விலங்குகளின் ஒலி

செயற்கையான ஒலி
பல்வேறு கருவிகளினால் எழுப்பப்படும் ஒலி.
உ+ம்: மோட்டார் வாகனத்தின் ஒலி, விமானத்தின் ஒலி, மணி ஓசை, வாத்தியங்களின் ஒலி

இசை ஒலி
சந்தத்திற்கேற்ப இசைக்கின்ற, மீட்டுகின்ற ஒலி இசை ஒலி ஆகும்.
உ+ம்: பாடல், வயலின், புல்லாங்குழல், வீணை

சத்தம்
சந்தத்திற்கேற்ப ஒலிக்காதவை சத்தம் எனப்படும்.
உ+ம்: வாகனங்களின் ஒலி, இயந்திரங்களின் ஒலி, சந்தையில் எழுப்பப்படும் ஒலி

ஒலி உற்பத்தி

ஒலி

ஒலி
ஏதாவது பொருள் அதிர்வதின் மூலம் ஒலி தோற்றுவிக்கப்படுகின்றது.
இசைக்கவர் அதிர்வதின் மூலம் ஒலி எழுப்பப்படுகின்றது.

தொண்டையில் உள்ள குரல் நாண்கள் அதிர்வதின் மூலம் கதைக்க முடிகின்றது.

இழைகள்/தந்திகள் அதிர்வதன் மூலம் கிடார், வயலின், வீணை, தம்புரா, யாழ் போன்றன ஒலி எழுப்புகின்றன.

மென்சவ்வு அதிர்வதின் மூலம் மேளம், ரபான், மத்தளம் போன்றன ஒலி எழுப்புகின்றன.

வளி அதிர்வதன் மூலம் புல்லாங்குழல், நாதஸ்வரம், மவுத் ஓர்கன் என்பன ஒலி எழுப்புகின்றன.
தேனீக்கள் ரீங்காரமிடும் ஒலி - அவற்றின் சிறகுகளின் வேகமான அடிப்பு.
வெட்டுக்கிளி, தத்து வெட்டி போன்றவற்றின் ஒலி - ஒரு கால் மற்றைய காலில் உரோஞ்சுதல்.

ஒலியின் ஊடுகடத்தல்

ஒலி அலைகள் பயணம் செய்வதற்கு ஊடகம் அவசியம். வளியற்ற வேற்றிடத்தினுள் ஒலியலைகள் பயணம் செய்யாது. நாம் கதைப்பது பூமியில் மற்றவர்களுக்குக் கேட்பது வளிமண்டலத்தில் உள்ள வளியில் ஒலி பயணம் செய்வதால் ஆகும். ஆனால் விண்வெளியில் ஒருவர் கதைப்பது மற்றவருக்குக் கேட்பது கிடையாது ஏனெனில் அங்கே உள்ளது வேற்றிடமாகும்.

ஒலிமுதலில் பிறப்பிக்கப்பட்ட ஒலி அதிக தூரத்திற்கு பரந்து செல்லல் ஒலி ஊடு கடத்தல் என அழைக்கப்படும். நாம் கேட்கும் பல்வேறு ஒலிகள் வளியினூடாக ஊடு கடத்தப்பட்ட ஒலிகளாகும். ஆகவே வளி ஒலியை ஊடுகடத்தும்.

ஒலியை வளி மட்டும் ஊடுகடத்துவதில்லை. ஒலி திண்மங்களின் ஊடாகவும், திரவங்களின் ஊடாகவும் கூட ஊடுகடத்தப்படும்.

வாயு ஊடகத்தை விட திண்மங்களின் ஊடாகவும், திரவங்களின் ஊடாகவும் ஒலி வேகமாக ஊடுகடத்தப்படும்.

திண்ம, திரவ, வாயு ஊடகங்களில் ஒலி பல்வேறு கதியில் பயணம் செய்கின்றது. திண்மங்களில் மிக அதிகமாகவும், வாயுக்களில் மிக மந்தமாகவும் ஊடுகடத்தப்படும்.


வளி - 330 m/s
நீர் - 1500 m/s
திண்மம் (உருக்கு) - 4500 m/s

மின்னலும், இடியும் ஒரே நேரத்தில் உண்டாகின்றன. ஆனால் எம்மை மின்னல் முதலில் அடைகின்றது. அதற்குக் காரணம் ஒளியின் வேகம், ஒலியின் வேகத்தை விட அதிகமாக இருப்பதாகும்.

அதிர்வு மீடிறன்

ஓர்கன், பியானோ போன்ற இசைக் கருவிகளில் ஒன்றுக்கொன்று தொலைவில் உள்ள சாவிகளை அழுத்தும் போது ஒலிகளுக்கிடையில் வேறுபாடு இருப்பதையும், அருகில் உள்ள சாவிகளை இசைக்கும் போது ஒலிகளுக்கிடையில் சிறிய வேறுபாட்டையும் காணலாம்.

இந்த ஒலிகளுக்கிடையிலான வேறுபாட்டுக்குக் காரணம் அதிர்வு மீடிறனாகும்.

ஒலிமுதலொன்றின் மூலம் ஓரலகு நேரத்தில் ஏற்படுத்தப்படும் அதிர்வுகளின் எண்ணிக்கை அதிர்வு மீடிறன் எனப்படும்.

யாதாயினும் ஒரு பொருள் செக்கனுக்கு 50 அதிர்வுகளை ஏற்படுத்தினால், அப்பொருளின் அதிர்வு மீடிறன் 50Hz (ஹேட்ஸ்) ஆகும்.

அதிர்வு மீடிறனை அளக்கும் சர்வதேச அலகு Hz (ஹேட்ஸ்) ஆகும்.

ஒலியை எழுப்பும் ஒலிமுதலின் நீளங்கள் மாறும்போது அவற்றின் மீடிறன்களும் மாறுபடும்.

நீளம் கூடியது குறைந்த மீடிறனையும்.
நீளம் குறைந்தது கூடிய மீடிறனையும் கொண்டிருக்கும்.

இசைக்கருவிகளில் மீடிறனை மாற்றுவதற்கு தேவையான உபாயங்கள் காணப்படுகின்றன.
தேவையான மீடிறனைமாற்றுவதின் மூலம் சங்கீதத்தில் ஏழு சுரங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.

தபேலா - வாரை இறுக்குவைத்தின்/தளர்த்துவத்தின் மூலம்.
நாதஸ்வரம்/புல்லாங்குழல் - அதில் உள்ள துளைகளை மூடி/திறப்பதினால் அதி உள்ள அதிரும் வளிநிரலின் நீளம் குறைதல்/கூடுதல்.
கிற்றார்/வீணை - இழையின் நீளம்/ இழுவை ஆகியவற்றை மாற்றுவதன் மூலம்.

புராதன சங்கீத உபகரணங்கள்
தவில், நாதஸ்வரம், கீழ்நாட்டுப் பறை, மேல்நாட்டுப்பறை , உடுக்கு, தவில், தம்பட்டம், மத்தளம்

நவீன சங்கீத உபகரணங்கள்
ஓர்கன், கிட்டார்

இசைச் சிகிச்சை
வேலைப் பளுவுடன் இருக்கும் மக்களின் மனதிற்கு இதத்தை ஏற்படுத்தக் கூடிய ஆற்றல் இசைக்கு உண்டு. மூளை மற்றும் நரம்புத் தொகுதியில் ஏற்படும் கோளாறுகள், இதயக் கோளாறுகள், மன அழுத்தம் போன்ற நோய்களை இசைச் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.

கேள்தகு எல்லை

மனிதக் காதினால் கேட்கக் கூடிய ஒலியின் அதிர்வு மீடிறன் வீச்சு (கேள்தகு எல்லை) - 20Hz - 20,000Hz.
20Hz விட குறைந்த மீடிறனையோ 20,000Hz விடக் கூடிய அதிர்வு மீடிறனையோ கொண்ட ஒலிகளை மனிதனால் கேட்க முடியாது.ஆனால் நாயால் கேட்க முடியும்.
வௌவாலுக்கு 70,000Hz வரை கேட்கும் ஆற்றல் உண்டு.



No comments:

Post a Comment