Light in Tamil
பொருள் ஒன்றை நாம் பகலிற் பார்க்க முடிகின்றது ஆனால் இரவிற் பார்க்க முடிவதில்லை. ஆகவே பொருள் ஒன்றைப் பார்பதற்கு கண்ணும், ஒளியும் அவசியமாகும்.
ஒளி முதல்கள்
சில பொருட்களில் இருந்து ஒளி தோற்றுவிக்கப்படுகின்றது. ஒளியைத் தோற்றுவிக்கும் பொருட்கள் ஒளி முதல்கள் எனப்படும்.
இவை இயற்கை ஒளிமுதல்கள், செயற்கை ஒளிமுதல்கள் என இருவகைப்படும். சூரியன், நட்சத்திரம், மின்மினிப்பூச்சி என்பன இயற்கை ஒளிமுதல்களாகும். மின்விளக்கு, எண்ணெய்விளக்கு, மெழுகுதிரி போன்றன செயற்கை ஒளிமுதல்களாகும்.
ஒளிரும் பொருட்கள் (Luminous object)
ஒளியை வெளிவிடும் பொருட்கள் ஒளிரும் பொருட்கள் எனப்படும். அவற்றை நாம் கண்களாற் பார்க்கலாம்.
உ+ம்: சூரியன், நட்சத்திரம், ஏற்றிய விளக்கு, மின்மினிப்பூச்சி, ஒளியை உண்டாக்கும் காளான்
ஒளிராப் பொருட்கள் (Non Luminous object)
ஒளியைத் தாமாக தோற்றுவிக்காத பொருட்கள் ஒளிராப் பொருட்கள் எனப்படும்.
உ+ம்: புத்தகம், அலுமாரி, கதிரை, சந்திரன்
ஒளிராப் பொருட்களைப் பார்ப்பதற்கு ஒளிரும் பொருளொன்றின் ஒளிக்கதிர்கள் அப்பொருளின் மீது பட்டுத் தெறித்து எமது கண்ணை அடையவேண்டும்.
சந்திரன் ஒரு ஒளிராப் பொருளாகும் ஆனால் நாம் அதைப் பார்ப்பதற்குக் காரணம் சூரியனின் ஒளிக்கதிர்கள் அதன் மீது பட்டுத் தெறித்து எமது கண்ணை அடைவதாகும்.
பொருட்களின் ஊடாக ஒளி செல்லுதல்
சில பொருட்களின் ஊடாக எதிர்ப்பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள ஒளிமுதலை/ பொருளை அவதானிக்க முடியாதது. அவ்வாறான பொருட்கள் ஒளி ஊடுகாட்டாத பொருட்கள் (Opaque) எனப்படும்.
உ+ம்: கடதாசி அட்டை, உலோகம், பலகை, தார்.
சில பொருட்களின் ஊடாக எதிர்ப்பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள ஒளிமுதலை/ பொருளை தெளிவாகப் பார்க்க முடியும். இவ்வாறான பொருட்கள் ஒளி ஊடுகாட்டும் பொருட்கள் (Transparent) எனப்படும்.
உ+ம்: மெல்லிய கண்ணாடி, தெளிந்த நீர், செலோபேன் தாள்
சில பொருட்களின் ஊடாக எதிர்ப்பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள ஒளிமுதலை/ பொருளை தெளிவாகப் பார்க்க முடிவதில்லை. இவ்வாறான பொருட்கள் ஒளி ஊடுகசியும் பொருட்கள் (Translucent) எனப்படும்.
உ+ம்: எண்ணெய் பூசப்பட்ட கடதாசி, கலங்கிய நீர், நிற செலோபேன் தாள்
ஒளி சில திண்ணமப் பொருட்களின் ஊடாகவும் , சில திரவப் பொருட்களின் ஊடாகவும் , வாயு ஊடாகவும் செல்லும். அவை பொருட்களுக்குப் பொருள் செல்லும் தன்மை வேறுபாடும். ஒளி வளியின் ஊடாகச் செலவதனால்த் தான் நாம் பொருட்களைப் பார்க்க முடிகின்றது. நீரின் ஊடாக ஒளி செல்வதனால்த் தான் நீரில் உள்ள மீன்களை எங்களாற் பார்க்க முடிகின்றது.
ஒளியின் பயன்கள்
- தாவரங்களின் ஒளித்தொகுப்பு
- பொருட்களைப் பார்பதற்கு
- ஒளியைப் பெறுதல்
- சமிஞ்சைகள்
- தொடர்பாடல்கள்
- மருத்துவத் தேவைகளுக்கு
- பொழுதுபோக்கு
நிழல் (Umbra) உண்டாதல்
ஒளி முதலில் இருந்து உருவாகும் ஒளி, ஒளி ஊடுபுகவிடாத பொருளினூடாகச் செல்லாததால் எதிர்ப்பக்கத்தில் நிழல் தோன்றுகின்றது. பொருளொன்றின் மீது படும் ஒளிமுதலிலல் இருந்து வரும் ஒளியின் அளவு, திசை, இடைப்பட்ட தூரம் என்பவற்றிற்கேற்றவாறு நிழலின் நீளமும், திசையும், தன்மையும் மாறுபடும்.
ஒளிமுதல், ஒளிபுகா பொருள் என்பன மிக அருகே இருக்கும் போது எதிர்ப்பக்கத்தில் இருக்கும் சுவர்/திரை மீது விழும் நிழல் தெளிவற்று இருக்கும். நிழலைச் சுற்றி மேலும் ஒரு நிழற் பிரதேசம் உருவாகியிருக்கும். இப்பிரதேம் துணை/அயல் நிழல் (Penumbra) எனப்படும்.
ஒளிமுதலுக்கும், ஒளி புகாப் பொருளுக்கும் இடைப்பட்ட தூரத்தை அதிகரிக்கும் போது துணை நிழல் படிப்படியாக மறைந்து விடும். இச் சந்தர்ப்பத்தில் தெளிவான நிழலைப் (கருநிழல்) பெற முடியும்.
நிழல்கள் தோன்றுவதன் காரணமாகவே சூரிய, சந்திர கிரணங்கள் தோன்றுகின்றன.
தளவாடி (Plane mirror)
ஒளிக்கதிர்கள் தளவாடியின் மேற்பரப்பிற் பட்டு, அந்த மேற்பரப்பில்லிருந்து எதிர்த் திசையில் திரும்பிச் செல்வது ஒளித்தெறிப்பு (Reflection) எனப்படும். அழுத்தமான மேற்பரப்புகளில் ஒளி நன்கு தெறிப்படைகின்றது. ஒளி தெறிப்படைவதால் ஆடிகளில் இருந்து விம்பங்கள் (Image) தோன்றுகின்றன.
திரையில் பெறக் கூடிய விம்பம் உண்மை விம்பம் எனவும், திரையில் பெற முடியாத விம்பம் மாய விம்பம் எனவும் அழைக்கப்படும்.
தளவாடியில் தோன்றும் விம்பத்தின் இயல்புகள்
- திரையில் பெற முடியாது (மாய விம்பம்).
- நிமிர்ந்தது.
- விம்பம் பொருளளவானது.
- விம்பம் வலம், இடம் மாறித் தென்படும்(பக்க நேர் மாறல்).
- விம்பம் ஆடியின் பின்னால் தோன்றும்.
- ஆடியில் இருந்து பொருள் உள்ள தூரம், ஆடியிலிருந்து விம்பம் உள்ள தூரத்துக்குச் சமமானது.
பல் விம்பங்கள்
தளவாடிகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிகையில் ஒன்றுக்கொன்று செங்குத்தாக, வேறுகோணத்தில் அல்லது சமாந்தரமாக வைக்கப்படும் போது ஒன்றுக்கு மேற்பட்ட விம்பங்கள் தோன்றும். இவை பல்விம்பங்கள் எனப்படும்.
இடைப்பட்ட கோணம் | விம்பங்களின் எண்ணிக்கை |
90 | 3 |
60 | 5 |
45 | 7 |
30 | 11 |
சமாந்தரம் | பல |
தளவாடிகளுக்கு இடையிலான கோணம் குறைவடையும் போது, தோன்றும் விம்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
No comments:
Post a Comment