Monday, November 26, 2018

கூண்டிற் கிளி

கூண்டிற் கிளி

 பவளம் 
பச்சைக் கிளி நீ பாடாயோ
பவளம் என்றும் கூறாயோ
கொச்சி மிளகாய் தருகின்றேன்
கொய்யாப்பழமும் தருகின்றேன்.

வண்ணக் கூண்டில் இருக்கின்றாய்
வளையத்தின் மேல் நடிக்கின்றாய்
கண்ணில் நீரை நிறைக்கின்றாய்
கவலை உனக்கும் வேறுண்டோ.

பூனை வந்து பிடிக்காமல்
பூட்டி உன்னைக் காத்திடுவேன்
தேனைப் போன்ற மாங்கனிகள்
தேடித் தின்னத் தந்திடுவேன்.

 கிளி 
பச்சைக் கிளியும் நானேதான்
பவளக் கொடியும் நீயேதான்
கொச்சி மிளகாய் தின்றென்ன
கொய்யாப்பழமும் தின்றென்ன.

கூண்டில் என்னை அடைத்துநீ
குழந்தை மொழிகள் சொல்கின்றாய்
வீட்டில் உன்னை அடைக்கநீ
விரும்பும் இன்பம் கொள்வாயோ.

காலைத் தூக்கி நடிக்கின்றாய்
கையைக் காட்டி அழைகின்றாய்
கோலப் பந்தை அடிக்கின்றாய்
கூந்தல் பின்னி முடிக்கின்றாய்.

பள்ளிக்கூடம் போகின்றாய்
படமும் பார்க்கப் போகின்றாய்
வெள்ளம் பெருகும் ஆற்றிலே
வீழ்ந்து நீந்திக் குளிக்கின்றாய்.

கல்லைத் தூக்கி எறிகின்றாய்
கனிகள் வீழ்த்தித் தருகின்றாய்
நல்லம்மாவுன் தோழியுடன்
நாளும் கூடித் திரிகின்றாய்.

சிறகை விரித்துப் பறக்கவோ
தேடிப் பழத்தைப் புசிக்கவோ
பறவை இனத்தைக் கலக்கவோ
பாவி எனக்கு விதியில்லை.

பச்சைச் சிறகை விரித்து நான்
பறந்து வானிற் பாடுவேன்
உச்சிக் கொம்பிற் சேருவேன்
உன்னை அங்கு கூவுவேன்.

சோலை தோறும் சென்று சென்று
தோழிமாரைக் கூடுவேன்
மாலை தோறும் வந்துனது
மாமரத்திற் பாடுவேன்.

தோழிக்கிளிகள் சூழ வந்து
தோழி யுன்னைப்  போற்றுவேன்
வாழி பவளம் என்னை நீ
வைத்த சிறையில் நீக்குவாய்.

அடிமைவாழ்வு ஒழிக வென்றே
அன்புக் காந்தி சொல்லவும்
கொடிய சிறையில் வைத்தென்னைக்
கொல்லுகின்றாய்  நல்லதோ.

பவளம்
நல்ல மொழிகள் கூறியே
நாண வைத்தாய் என்னை நீ
செல்லக் கிளியென் தோழியே
சிறையை நீக்கி விடுகின்றேன்.

கூட்டில் உங்கள் குலத்தினைக்
கொண்டடைத்தல் கொடியது
காட்டில் வானிற் பறந்து நீர்
காணும் இன்பம் பெரியது.

பவளம் கூட்டைத் திறந்தனள்
பச்சைக் கிளியும் பறந்தது
அவளும் வானைப் பார்த்தனள்
அன்புக் குரலுங் கேட்டது.


                                                 - வித்துவான் க.வேந்தனார் 
                                                    'கவிதைப் பூம்பொழில்'




No comments:

Post a Comment