Friday, September 3, 2021

அணிகள்

செய்யுளையோ, உரைநடையையோ அழகுபடுத்துவதற்காக அணிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இவ்வணிகளை
  • உவமை அணி,
  • உருவக அணி,
  • தன்மை நவிற்சி அணி,
  • தற்குறிப்பேற்ற அணி,
  • உயர்வு நவிற்சி அணி
என வகைப்படுத்தலாம்.


உவமை அணி

வர்ணிக்க வேண்டிய விடயத்தை தெரிந்த பொருளோடு ஒப்பிட்டு விளக்குதல் உவமை அணி ஆகும். இங்கு மூன்று பிரதான அம்சங்கள் உண்டு.

  • தெரிந்த விடயம்(உவமானம்)
  • விளக்க வேண்டிய விடயம்(உவமேயம்)
  • ஒப்பிடப்படும் இயல்பு(பொதுத்தன்மை)

இங்கே உவமை உருபுகளாக போல, போன்ற, ஒத்த ஆகிய உருபுகள் அமையும்.
உ+ம்:
மிளகாய்ப் பழத்தை ஒத்ததாக கிளியின் சொண்டு இருந்த்தது.

நாடிமட அன்னத்தை நல்ல மயிற்குழாம்
ஓடி வளைக்கின்ற தொப்பவே - நீடியநல்
பைங்கூந்தல் வல்லியர்கள் பற்றிக் கொடுபோந்து
தங்கோவின் முன்வைத்தார் தாழ்ந்து.

சிறந்த மயிற்கூட்டமானது ஓடி வளைந்தது போன்ற நீளமான, பசுமையான கூந்தலை உடைய பெண்கள் இளமையான அன்னத்தை நாடிச் சென்று வளைத்துப் பிடித்து தமது அரசரின் முன்னால் பணிந்து வைத்தார்கள்.
(நளவெண்பா)


உருவக அணி

உவமானம், உவமேயம் ஆகிய இரண்டிற்கும் வேறுபாடு இல்லாமல் உவமேயத்தில் உவமானத்தை ஏற்றிக் கூறல் உருவகம் எனப்படும்.
உ+ம்:
சூரியப்பந்து,
கோபத் தீ

தன்மை நவிற்சி அணி

கூறக் கருதிய ஒரு பொருளின் உண்மையான தன்மைகளை உள்ளது உள்ளபடியே அதன் இயல்பு கெடாதவாறு அழகுற எடுத்துரைப்பதே தன்மை நவிற்சி அணி எனப்படும்.

உ+ம்:
வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்.

(உள்ளதை உள்ள படி இயல்பாக கூறும். மிகைப் படுத்தல் இருக்காது உவமையோ , உருவகப்படுதலாலோ இருக்காது )


உயர்வு நவிற்சி அணி

ஒன்றைப் பற்றி மிகவும் உயர்த்தி, அளவுக்கு மேல் மிகுத்து கூறுவது உயர்வு நவிற்சி அணி எனப்படும்.
உ+ம்:
குதிரை காற்றிலும் வேகமாகப் பாய்ந்து ஓடியது.


தற்குறிப்பேற்ற அணி

இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது நாம் கூறக் கருதிய பொருளை ஏற்றி சுவைபடக் கூறுவதே தற்குறிப்பேற்ற அணி.

உ+ம்:
கோவலனும் கண்ணகியும் மதுரை நகருக்குள் நுழைய முற்படும் போது தோரண வாயிற் கொடிகள் கோவலன் மதுரையின் கொல்லப்படுவான் என்பதை அறிவிப்பன போல் வரவேண்டாம் என காற்றில் ஆடின.

போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பன போல் மறித்துக் கைகாட்ட
(சிலப்பதிகாரம்)



No comments:

Post a Comment