Wednesday, September 15, 2021

சிறுவர் பாடல்

சிறுவர் பாடல்

குருவி ஒன்று மரத்திலே

குருவி ஒன்று மரத்திலே
கூடு ஒன்று கட்டியே
அருமைக் குஞ்சு மூன்றையும்
அதில் வளர்த்து வந்தது

நித்தம் நித்தம் குருவியும்
நீண்ட தூரம் சென்றிடும்
கொத்தி வந்த இரைதனைக்
குஞ்சு தின்னக் கொடுத்திடும்

இறைவன் தந்த இறகினால்
எழுந்து பறக்கப் பழகுவீர்
இரையைத் தேடித் தின்னலாம்
என்று குருவி சொன்னது

நன்று நன்று நாங்களும்
இன்றே பறக்கப் பழகுவோம்
என்று கூறித் தாயுடன்
இரண்டு குஞ்சு கிளம்பின

ஒன்று மட்டும் சோம்பலாய்
ஒடுக்கிக் கொண்டு உடலையே
அன்று கூட்டில் இருந்தது
ஆபத் தொன்று வந்தது

எங்கிருந்தோ வந்தவன்
ஏறி ஒருவன் மரத்திலே
அங்கிருந்த கூட்டினை
அடைய நெருங்கிச் சென்றனன்

சிறகிருந்தும் பறக்கவே
தெரிந்திடாமல் விழித்திடும்
குருவிக் குஞ்சை பிடித்தனன்
கொண்டு வீடு சென்றனன்

குருவிக் குஞ்சு அவனது
கூட்டில் வாழலானது
அருமை அன்னை உரைத்தது
அதனின் காதில் ஒலித்தது.


அழ. வள்ளியப்பா


பாடலுக்கான கதை

ஓரு மரத்திலே குருவி ஒன்று அழகான கூடு கட்டி அதில் முட்டையிட்டு, மூன்று குஞ்சுகளைப் பொரித்து வளர்த்து வந்தது. தாய்க்குருவி தினமும் நீண்ட தூரங்களுக்கு அலைந்து திரிந்து தனது குஞ்சுகளுக்கு ஏற்ற இரையைத் தனது அலகிலே கொண்டு வந்து கொடுத்துக் கொடுத்து வளர்த்தது. குஞ்சுகளுக்கு இறகும் முளைத்தது. ஒரு நாள் தாய்க்குருவி "உங்களுக்கு இப்போது இறைவன் இறகுகளைக் கொடுத்து விட்டான் நீங்களும் என்னோடு இரையை தேடி உண்ண பறந்து வரப்பழகுங்கள்." என்று சொன்னது. "நல்லது அம்மா நாங்கள் இன்றைக்கே உங்களுடன் வருகிறோம்" என்று இரண்டு குருவிகள் சொல்லி அம்மாவுடன் சேர்ந்து இரை தேடச் சென்றன. ஆனால் ஒரு குருவி மட்டும் சோம்பலோடு தனது இறகுகளை ஒடுக்கிக் கொண்டு கூட்டிலேயே இருந்தது. அப்போது அந்தப் பக்கமாக வந்த மனிதன் ஒருவன் அந்த அழகிய கூட்டைக் கண்டான். அம்மனிதன் அந்த மரத்திலே ஏறி கூட்டை அடைந்தான் ஆனாலும் அந்த சோம்பேறிக்குருவி இறைவன் கொடுத்த இறகுகளைப் பயன்படுத்தத் தெரியாமல் விழித்தது. அவன் அந்த குருவிக்குஞ்சைப் பிடித்து வீட்டுக்குக் கொண்டு சென்று, தனது கூட்டிலே வைத்துக்கொண்டான். அப்போது அதற்கு தாயின் வார்த்தைகள் காதிலே ஒலித்துக் கொண்டிருந்தது.



இதில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது

நாங்கள் சோம்பலை விட்டு முயற்சி செய்து, பெரியவர்களுக்கு மதிப்பளித்து அவர்களின் சொற்படி நடந்தால் எங்களின் எதிர்காலம் நன்றாக அமையும். இல்லாவிட்டால் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து எதிர்காலம் கேள்ளிவிக்குறியாகிவிடும்.



No comments:

Post a Comment