தரப்பட்ட பந்தியைத் தொடர்ந்து வாக்கியங்கள் எழுதுதல்| புலமைப்பரிசில்
வாக்கியங்கள் எழுதுதல் புலமைப்பரிசில் கடந்த கால வினா விடைகள் 1
பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியை பார்ப்பதற்கு நிமலன் விளையாட்டு மைதானத்திற்குச் சென்றான். அப்போது 100 மீற்றர் ஓட்டப் போட்டி ஆரம்பமாக இருந்தது. அப்போட்டியில் நிமலனின் அண்ணாவும் பங்குபற்றுவதாக இருந்தது. நிமலனாக உங்களைக் கருதிக் கொண்டு அதன் பின்னர் நிகழ்ந்தவை பற்றி விவரிக்கும் மூன்று வாக்கியங்களை எழுதுக.
(ஒவ்வொரு வாக்கியமும் ஐந்து சொற்களுக்கு குறையாது இருத்தல் வேண்டும். எழுவாய் பயனிலைத் தொடர்பும் எழுத்துக்கூட்டலும் சரியாக இருத்தல் வேண்டும்.)
100 மீற்றர் ஓட்டப் போட்டி
- எனது அண்ணாவும் அந்த 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றத் தயாராக இருந்தார்.
- போட்டியில் பங்குபற்றும் வீரர்கள் அனைவரும் தொடக்கக் கோட்டில் நின்றனர்.
- நடுவர் விசில் ஊதியதும் வீரர்கள் அனைவரும் வேகமாக ஓடத் தொடங்கினர்.
- எனது அண்ணாவை உற்சாகப்படுத்த குரல் எழுப்பினேன்.
- எனது அண்ணா மிகவும் வேகமாக முன்னோக்கி ஓடினார்.
- இறுதியில் எனது அண்ணா முதலாவதாக எல்லைக்கோட்டை அடைந்தார்.
- அவருடைய வெற்றியைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
- நான் மைதானத்திற்குள் ஓடிச் சென்று அண்ணாவை வாழ்த்தினேன்.
வாக்கியங்கள் எழுதுதல் புலமைப்பரிசில் கடந்த கால வினா விடைகள் 2
வேகமாக வீசிய காற்றினால் கதவு மூடப்பட்டது. புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்த நான் திகைப்படைந்தேன். புத்தகத்தை ஒருபக்கத்தில் வைத்து விட்டு வீட்டுக்கு வெளியே வந்தேன். காற்றினால் மரங்கள் சுழன்று சுழன்று ஆடுவது என் கண்களுக்குத் தெரிந்தது. அத்துடன் அணில் ஒன்று ஓயாமல் கீச்சிடும் சத்தமும் கேட்டது. நான் அச்சத்தம் வந்த திசையை நோக்கினேன். சம்பவத்தின் மீதிப் பகுதியை நிறைவு செய்வதற்குப் பொருத்தமான மூன்று வாக்கியங்கள் எழுதுக .
(ஒவ்வொரு வாக்கியத்திலும் ஐந்து சொற்களுக்கு மேல் இடம்பெற வேண்டும். எழுவாய், பயனிலைத் தொடர்புகளும் எழுத்துக்கூட்டலும் சரியாக இருக்க வேண்டும்.)
- சத்தம் வந்த திசையில் ஒரு சிறிய குட்டி அணில் மரத்தடியில் விழுந்து கிடந்தது.
- பலத்த காற்றினால் அந்த அணில் மரத்திலிருந்து கீழே விழுந்திருந்தது.
- அதைக் கண்ட நான் மிகவும் கவலையடைந்து அருகில் சென்றேன்.
- அணில் பயத்துடன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது.
- நான் மெதுவாக அதனைத் தூக்கி பாதுகாப்பான இடத்தில் வைத்தேன்.
- அந்த அணிலுக்கு சிறிதளவு தண்ணீரும் உணவும் கொடுத்தேன்.
- அணில் சிறிது நேரத்தில் மெதுவாக அசையத் தொடங்கியது.
- காற்றின் வேகம் குறைய சுற்றுப்புறமும் அமைதியாகியது.
- அணில் அருகிலிருந்த மரத்தில் ஏறிச் சென்றதை நான் பார்த்து மகிழ்ந்தேன்.
- அச்சம்பவம் எனது மனதில் என்றும் மறக்க முடியாத நினைவாக இருக்கின்றது.
வாக்கியங்கள் எழுதுதல் புலமைப்பரிசில் கடந்த கால வினா விடைகள் 3
சில மாதங்களாகப் புவியின் மேற்பரப்பில் ஒரு மழைத் துளியும் விழவில்லை. கடும் வெப்பத்தின் விளைவாக நிலத்தில் வெடிப்புகள் கோடுகளாகக் காணப்பட்டன. ஆறுகள், குளங்குட்டைகள், கிணறுகள், தடாகங்கள் ஆகியன வரண்டு போய் இருந்தன. கண்ணிற்குத் தெரியும் அளவிற்குப் பச்சை நிறம் காணப்படவில்லை. அதிஷ்டவசமாக திடீரென இடி மின்னலுடன் வானம் மழை பொழியத் தொடங்கியது. சம்பவத்தின் மீதிப் பகுதியை நிறைவு செய்வதற்குப் பொருத்தமான மூன்று வாக்கியங்கள் எழுதுக .
(ஒவ்வொரு வாக்கியத்திலும் ஐந்து சொற்களுக்கு மேல் இடம்பெற வேண்டும். எழுவாய், பயனிலைத் தொடர்புகளும் எழுத்துக்கூட்டலும் சரியாக இருக்க வேண்டும்.)
- திடீரெனப் பெய்த மழையினால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.
- நீண்ட காலத்திற்குப் பின்னர் பூமித்தாய் குளிர்ச்சியடையத் தொடங்கினாள்.
- மழைத்துளிகள் காய்ந்த நிலத்தின் மீது தொடர்ந்து விழுந்தன.
- வரண்டு போயிருந்த ஆறுகளிலும் குளங்களிலும் நீர் தேங்கத் தொடங்கியது.
- விவசாயிகள் தங்களுடைய வயல்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
- மழைநீர் வயல்களுக்குள் பாய்ந்து சென்று பயிர்களுக்கு உயிரூட்டியது.
- மரங்களும், செடிகளும் மழையால் புத்துயிர் பெற்றன.
- பறவைகளும், விலங்குகளும் தங்களுடைய வாழ்விடங்களுக்கு மகிழ்ச்சியுடன் திரும்பின.
- அந்த மழை எல்லா மக்களின் மனங்களிலும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.
வாக்கியங்கள் எழுதுதல் புலமைப்பரிசில் கடந்த கால வினா விடைகள் 4
பாடசாலையில் இடம்பெறும் புத்தகக் கண்காட்சியைப் பார்பதற்குக் குமுதினி வந்தபோது பெருமளவிலானோர் அங்கு வந்திருப்பதனைக் காணக்கூடியதாயிருந்தது. கண்காட்சிக் கூடத்தினுள் சென்று பார்வையிட்ட குமுதினியின் மனதில் பெருமகிழ்ச்சி உண்டாகியது. அதற்குக் காரணம் இதுவரை காலமாக அவள் தேடிக்கொண்டிருந்த புத்தகத்தை அங்கு கண்டதனால் ஆகும். உங்களைக் குமுதினி எனக் கருதி அதன் பின்னர் நடந்தவை பற்றி விவரிக்கும் வாக்கியங்களை எழுதுக.
(ஒவ்வொரு வாக்கியத்திலும் ஐந்து சொற்களுக்கு மேல் இடம்பெற வேண்டும். எழுவாய், பயனிலைத் தொடர்புகளும் எழுத்துக்கூட்டலும் சரியாக இருக்க வேண்டும்.)
புத்தகக் கண்காட்சியில் எனது அனுபவம்
- நான் நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த புத்தகத்தை மகிழ்ச்சியுடன் எடுத்துப் பார்த்தேன்.
- அந்தப் புத்தகத்தின் அழகான அட்டைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது.
- புத்தகத்தைத் திறந்து அதன் சில பக்கங்களை மேலோட்டமாக வாசித்தேன்.
- நான் எதிர்பார்த்த அனைத்துத் தகவல்களும் அந்தப் புத்தகத்தில் சுருக்கமாக இருந்தன.
- எனவே அந்தப் புத்தகத்தை வாங்குவதற்கு முடிவு செய்தேன்.
- புத்தகத்தின் விலையை விற்பனையாளரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.
- நான் என்னிடம் இருந்த பணத்தைக் கொடுத்து அந்தப் புத்தகத்தை வாங்கினேன்.
- புத்தகத்தைப் பெற்றுக்கொண்டதும் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.
- பின்னர் கண்காட்சியில் இருந்த மற்ற புத்தகங்களையும் சிறிது நேரம் பார்வையிட்டேன்.
- இறுதியில் மகிழ்ச்சியுடன் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினேன்.
மிருகக்காட்சிச்சாலை| கட்டுரை
தரம் ஐந்து மாணவர்களுக்கென ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கல்விச் சுற்றுலாப் பயணத்தின் நிறைவில் மிருகக்காட்சிச்சாலையைப் பார்வையிட நாங்கள் வந்திருந்தோம். மிருகக்காட்சிச்சாலையினுள் நுழையும்போது வகுப்புக்குப் பொறுப்பான ஆசிரியை "விலங்குகளைத் தொடச் செல்லவோ அல்லது விலங்குகளுக்கு உணவு வழங்கவோ கூடாது." எனக் கூறினார். மிருகக்காட்சிச்சாலையின் உள்ளே நுழைந்ததுமே விலங்குகளின் பல்வேறு ஒலிகளைக் கேட்கக்கூடியதாயிருந்ததுடன் நாங்கள் மெதுவாக முன்னேறிச் சென்றோம். பல்வேறு நிறங்களைக் கொண்ட பறவைகளின் வகைகளையும், மயில்களின் நடனங்களையும் காணும் போது எங்களுக்கு முன்னொருபோதுமில்லாத மகிழ்ச்சி ஏற்றபட்டது. அதன் பின்னர் பல வண்ண அலங்கார மீன்கள் விசேடமாகக் காணப்பட்ட இடத்தையும், பயங்கரமான ஒலி எழுப்பும் சிங்கம், கரடி ஆகிய மிருகங்கள் உள்ள இடங்களையும் தாண்டி நாங்கள் யானைகளின் விளையாட்டைப் பார்வையிட வந்தோம். அது மிகவும் அற்புதமான காட்சியாக இருந்தது. சுற்றுலாவில் பங்குபற்றியிருந்த பெற்றோர்கள் எங்கள் அனைவருக்கும் வடையுடன் வாழைப்பழமும் வழங்கினர். அனைத்தும் முடிவு அடைந்த பின்னர் அருணும் வதனியும் வாழைப்பழத்தோல்களைக் கடதாசிப் பையினுள் சேகரித்தனர். அனைவரும் பேருந்தினுள் ஏறிய பின்னர் சுற்றுலாவை ஒழுங்குபடுத்திய ஆசிரியை அனைவருக்கும் நன்றி கூறினார். அதன் பின்னர் நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியோடு வீடு நோக்கித் திரும்பினோம்.

No comments:
Post a Comment